டெல்லியில் நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி, “நீட் குளறுபடிகள் குறித்து விவாதிக்கப்படும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை தீவிரமாகிவருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு உயர் கல்வித்துறைச் செயலாளர் வினீத் ஜோஷியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது.

மத்திய விலங்கு பராமரிப்புத் துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த நரேஷ் பால் கங்வார் ஐ.ஏ.எஸ், கிராமப்புற வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளராக இருக்கும் கர்நாடக பிரிவைச் சேர்ந்த டி.கே.அனில் குமார் ஐ.ஏ.எஸ் ஆகிய இருவரும் புதிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது கல்வித் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட நரேஷ் பால் கங்வார் ஐ.ஏ.எஸ், வேளாண்மைத் துறைச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், தேசிய தோட்டக்கலை வாரியத்தின் (NHB) தோட்டக்கலை மானியமாக ரூ.1.16 கோடிக்கும் அதிகமான தொகையை அவரது மனைவி, தாய் மற்றும் மகன் ஆகியோர் பெயரில் பெற்று மோசடி செய்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மோடிக்குத் தன்னை மறைத்துக் கொள்ளத் தூய்மையான முகங்கள் தீர்ந்துவிட்டன. வினீத் ஜோஷியைப் பாதுகாப்பதற்காக, விசாரணை செய்யப்பட வேண்டிய ஒருவரையே புதிய கல்வித் துறைச் செயலாளராக நியமித்துள்ளார். நரேஷ் பால் கங்வார் வேளாண் செயலாளராக இருந்தபோது, அவருடைய மனைவி, தாய் மற்றும் மகன் ஆகியோர் இணைந்து ரூ.1.16 கோடிக்கும் மேல் தேசிய தோட்டக்கலை வாரிய மானியங்களைப் பெற்றுள்ளனர். இந்த அரசாங்கத்தில் ஊழல் எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்கு இதுவே சான்று” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து CJP நிறுவனர் அபிஜித் தீப்கே தன் எக்ஸ் பக்கத்தில், “அரசாங்கம் தவறு செய்தவர்கள் பொறுப்பேற்பதை உறுதி செய்வதற்குப் பதிலாக, ஊழலுக்கு வெகுமதி அளித்துக்கொண்டிருக்கிறது! நேற்று இரவு, கல்வித் துறைச் செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக, பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள விலங்கு நலத் துறையைச் சேர்ந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வினாத்தாள் கசிவு, நீர் தேர்வு முறைகேடு என்பது ஏதோ ஒரு தனிநபர் செய்த தவறு அல்ல.
தேர்வு நடத்தும் ஒட்டுமொத்த அமைப்பிலும், அதன் அதிகார வர்க்கத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ள முறைகேடாகும். ஆனால், ஒரு அதிகாரியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மற்றொரு அதிகாரியை நியமிப்பது இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்களை நேரடியாக அவமதிக்கும் செயல்.
அரசு நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் “சமரசம்” இதுதானா? இது பொறுப்பேற்பு கிடையாது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நாங்கள் ஓய்வு பெற மாட்டோம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.