மின்வெட்டு சர்ச்சை: அமைச்சரிடமே கேள்வி கேட்ட தவெக நிர்வாகி.. அடுத்த நிமிடமே POST DELETE! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் நிலவும் மின்தேவை மற்றும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வளவு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தவெக செய்தித் தொடர்பாளர் அனந்தஜித் பதிவிட்ட ஒரு பதிவு சமூக வலைதளங்களில் மரண அடி வாங்கியுள்ளதுடன், அரசியல் அரங்கில் பெரும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தனியாரிடம் யூனிட் ரூ.35 கொடுத்து மின்சாரம் வாங்குவது குறித்துப் பேசிய பலரும் அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த வரிசையில், தவெக செய்தித் தொடர்பாளரான அனந்தஜித் தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் நிர்மல் குமாரை டேக் செய்து போட்ட பதிவுதான் ஹைலைட்.

“இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, அமைச்சர் நிர்மல் குமார் அவர்களே.. இந்த மின்சாரத் தேவையையும் தட்டுப்பாட்டையும் நாம் முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும். பிற மாநிலங்களால் சாத்தியப்படும்போது, நாமும் போட்டி விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வழி கண்டிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், “முட்டுக்கொடுக்க இது திமுக இல்ல… எங்களது ஒரே கடைசி நம்பிக்கை முதலமைச்சர் விஜய் மட்டும்தான்” என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

தவெக நிர்வாகியே அரசை எதிர்த்து, அதுவும் சொந்த அமைச்சரின் துறையை விமர்சித்து இப்படி போர்க்கொடி தூக்கியதைப் பார்த்த எதிர்க்கட்சிகள் முதலில் அடடே.. என ஆச்சரியத்தில் உறைந்தன; ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே இந்த ஆச்சரியம் நிலைக்கவில்லை.. ஏன்னென்றால், அனந்தஜித்தின் பக்கத்தில் இருந்து அந்தப் பதிவு மாயமானது.

பதிவு காணாமல் போனதை மோப்பம் பிடித்த நெட்டிசன்கள், “மேலிடத்திலிருந்து வந்த போனில் அப்படியே அனந்தஜித் சைலண்ட் ஆகிட்டாரு போல” என்று கலாய்த்து வருகின்றனர். 

பதிவு நீக்கப்பட்டதைக் கவனித்தவர்கள், “தவெகவில் பேச்சுரிமை, கருத்துரிமை என்று எதுவுமே கிடையாதா?” என்று காரசாரமாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மின்கட்டண விவகாரத்தில் அரசைச் சாட முயன்று, சொந்தக் கட்சியையே நெட்டிசன்களிடம் மாட்டிவிட்டுச் சிக்கலில் இருக்கிறார் அனந்தஜித்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *