மின் கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்: ஜி.கே.வாசன் கண்டனம் | electricity tariff hike affects tn people GK Vasan

1279961.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. “ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. மின் கட்டணம் உயர்ந்தால் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தான்.

நடப்பு நிதியாண்டுக்கான மின் கட்டணம், ஜூலை 1 முதல் 4.83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது 400 யூனிட் வரை ரூ.4.60 லிருந்து ரூ.4.80 ஆக உயர்வு, 401 -500 யூனிட் வரை ரூ. 6.15 லிருந்து ரூ.6.45 ஆக உயர்வு, 501-600 யூனிட் வரை ரூ.8.15- ரூ.8.55 ஆக உயர்வு, 601-800 யூனிட் வரை 9.20-9.65 ஆக உயர்வு, 801-1000 யூனிட் வரை 10.20 -10.70 ஆக உயர்வு, 1000 யூனிட்டிற்கு மேல் ரூ.11.25 – ரூ.11.80 ஆக உயர்வு மற்றும் வணிக பயன்பாடு மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இப்படி உயர்த்தப்பட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள் மற்றும் தொழில் துறையும் நலிவடையும். எனவே தமிழக அரசின் மின் கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பானது மக்களின் மன நிலைக்கு எதிரானது.

தமிழகத்தில் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றும் விதமாக திமுக ஆட்சி செய்வது தான் திராவிட மாடல். ஏற்கனவே சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு என்று மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசின் திராவிட மாடல் மீண்டும் மின் கட்டண உயர்வை அறிவித்திருப்பது பொருளாதார சிரமத்தில் இருக்கும் மக்கள் மீது மீண்டும் பொருளாதார சுமையை ஏற்றும்.

எனவே தமிழக அரசு, உயர்த்தி அறிவித்திருக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *