மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா… மத்திய அரசு பலே பிளான்..! – Kumudam

Spread the love

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் இணைத்து தொகுதி மறுவரையறை மசோதாவையும் மத்திய அரசு முன்வைத்திருந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக இருப்பதால் அவற்றை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டது. ஆனால் தேவையான ஆதரவைப் பெற முடியாததால் அந்த மசோதாக்கள் நிறைவேறாமல் போனது. 

அப்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் 528 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், மசோதா நிறைவேற 352 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 298 வாக்குகள் கிடைத்ததாகவும், கூட்டணிக்கு வெளியிலிருந்தும் சில உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களுக்குப் பிறகு அரசியல் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மேற்கு வங்க அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்களின் நிலைப்பாடுகள் மத்திய அரசுக்கு புதிய கணக்கீடுகளை உருவாக்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக தொகுதி மறுவரையறை தொடர்பாக தென்னக மாநிலங்கள் பல்வேறு கவலைகளை முன்வைத்திருந்தன. மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னேற்றம் கண்ட மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற அச்சம் தமிழகத்தையும் சேர்த்து பல தென் மாநிலங்களில் எதிரொலித்துள்ளது.
இந்த நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மாற்று யோசனைகளும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரம், வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் மீண்டும் விவாதப் பொருளாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *