முகத்தை காட்டியும் தாராபுரத்தில் விஜய் மவுசு? மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அடிக்கும் அலாரம் | Edappadi Palaniswami on Alert? Vijay’s Popularity in Dharapuram and the Madurantakam Alarm

Spread the love

Tamilnadu

oi-Hema Vandhana

சென்னை: தமிழக அரசியலில் அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் தொகுதிகளில் மதுராந்தகமும் தாராபுரமும் முக்கியமானவை. கடந்த தேர்தலில் இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இப்போதைய இடைத்தேர்தல் நிலவரம் ஒரு புதிய அரசியல் கேள்வியை எழுப்பியிருக்கிறது..

அதிமுகவின் கோட்டையாக இருந்த தொகுதிகளில், அந்தக் கட்சியின் முன்னாள் வேட்பாளர்களே கட்சி மாறி தவெக சார்பில் களமிறங்கியிருக்கிறார்கள். இதில் மதுராந்தகத்தில் தவெக ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் இருந்து வருகிறது. 4வது சுற்றிலும் தவெகவே முன்னிலை வகிக்கிறது. ஆனால், அதிமுக 3வது இடத்துக்குச் சென்றுள்ளது. மறுபுறம், தாராபுரத்தில் அதிமுக முன்னிலையில் இருக்கிறது. இந்த மாறுபட்ட நிலவரத்தை எப்படி புரிந்துகொள்வது?

Edappadi Palaniswami Vijay Dharapuram Bypoll

மதுராந்தகத்தில் அதிமுக நிலை?

கடந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். அப்போது அதிமுகவின் வெற்றிக்கு உதவிய அதே வேட்பாளர், இப்போது தவெக சார்பில் போட்டியிடுகிறார்.. இப்போதைய நிலவரத்தில் அவர் தவெக சார்பில் முன்னிலையில் இருக்க, அதிமுக மூன்றாவது இடத்தில் உள்ளது.

கடந்த முறை அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள், இந்த முறை தங்களுடைய பழைய வேட்பாளருக்கே வாக்களிக்கிறார்களா? அதிமுகவின் வாக்கு வங்கி வேட்பாளருடன் தவெகவுக்குச் சென்றுவிட்டதா? அல்லது தவெக மீதான புதிய ஆதரவும் சேர்ந்திருக்கிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

தாராபுரத்தில் மாறிய கணக்கு

தாராபுரத்திலும் அதிமுகவில் இருந்து தவெகவுக்குச் சென்ற முன்னாள் வேட்பாளர் களமிறங்கியிருக்கிறார். ஆனால், மதுராந்தகத்தில் இருப்பதைப் போல இங்கு நிலைமை இல்லை. தாராபுரத்தில் அதிமுகவே முன்னிலையில் இருக்கிறது.

இதனால், இரண்டு தொகுதிகளிலும் ஒரே மாதிரியான அரசியல் மாற்றம் நிகழவில்லை என்பது தெரிகிறது. மதுராந்தகத்தில் அதிமுக மூன்றாவது இடத்துக்குச் சென்றுள்ள நிலையில், தாராபுரத்தில் அந்தக் கட்சி முன்னிலை பெற்றிருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

அதிமுகவின் கோட்டை

இந்த நிலவரத்தை வைத்து அதிமுகவின் கோட்டை முழுமையாக உடைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில், மதுராந்தகத்தில் அதிமுக மூன்றாவது இடத்தில் இருப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஒரு தொகுதியில் கட்சியின் செல்வாக்கு முக்கியமா, அல்லது அந்தக் கட்சியின் வேட்பாளருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு முக்கியமா என்பதை இந்தத் தேர்தல் விவாதத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. மதுராந்தகத்தில் முன்னாள் அதிமுக வேட்பாளர் தவெக சார்பில் முன்னிலையில் இருப்பதும், அதிமுக மூன்றாவது இடத்தில் இருப்பதும் இந்தக் கேள்வியை மேலும் தீவிரமாக்குகிறது.

விஜய்யின் செல்வாக்கு கை கொடுக்கிறதா

இத்தனைக்கும், முகத்தைக் காட்டாமலேயே விஜய் வெற்றி பெற்றுவிடுவார் என்றெல்லாம் பேசப்பட்டது.. ஆனால், இப்போது விஜய் நேரில் பிரச்சாரம் செய்தும், மாட்டு வண்டி ஓட்டியும், முருங்கைக்காய் பறித்தும் மக்களிடம் கவனம் ஈர்த்தார்… அப்படியிருந்தும், தாராபுரத்தில் தவெக பின்தங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இதனால், விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கு எந்த அளவுக்கு வாக்குகளாக மாறுகிறது, தவெகவின் சொந்த செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

அதேநேரம், ஒரு தொகுதியின் முன்னிலை நிலவரத்தை மட்டும் வைத்து விஜய்யின் செல்வாக்கை முழுமையாக மதிப்பிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.. இறுதி வாக்கு விவரங்கள் வெளியான பிறகுதான், அதிமுகவின் பழைய வாக்கு வங்கியில் ஏற்பட்ட மாற்றம் என்ன, தவெகவுக்குக் கிடைத்த புதிய ஆதரவு எவ்வளவு என்பதை இன்னும் தெளிவாக ஆராய முடியும்.

இப்போதைக்கு இந்தத் தேர்தல் எழுப்பும் முக்கியமான கேள்வி ஒன்றுதான்.. அதிமுகவின் கோட்டை என்பது கட்சியின் கோட்டையா, அல்லது அந்தக் கட்சியில் இருந்த வேட்பாளர்களின் கோட்டையா??

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *