இது குறித்து அப்னா கர் நிறுவனரும் வழக்கறிஞருமான பிரகாஷ் சந்த் பன்சால் கூறுகையில், “‘2022ம் ஆண்டு ஒரு குகையிலிருந்து கன்ஹையா லாலைத் தங்களது அமைப்பினர் மீட்டனர். அவர் முன்பு தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆனால், அவரது மனைவி இறந்த பிறகு, தனது சொத்துக்களைத் தனது சகோதரர்களின் பெயருக்கு எழுதிக்கொடுத்தார்.
பின்னர் அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, ஒரு குகையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மண்டி மாவட்டத்தின் ஜஞ்சேலி பகுதியிலுள்ள துனாக் கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா லால் மீட்கப்பட்ட பிறகு இந்த முதியோர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு, அன்றிலிருந்து இங்கேயே வசித்து வருகிறார்.
இதே போன்று கொல்கத்தாவைச் சேர்ந்த சபீனா, தனது வீட்டை விட்டு வழிதவறிச் சுற்றித் திரிந்து இமாச்சலப் பிரதேசத்தை வந்தடைந்தார். சிம்லாவிற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் 2025-ஆம் ஆண்டில் பிலாஸ்பூரில் உள்ள முதியோர் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
இருவரும் ஒரே இல்லத்தில் வசித்து வந்தபோது, அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பு ஏற்பட்டு, இறுதியில் தங்களது எஞ்சிய வாழ்க்கையை ஒன்றாகக் கழிக்க முடிவெடுத்தனர்” என்றார்.
திருமணத்தைத் தொடர்ந்து, கன்ஹையா லால், சபீனா ஆகியோர் இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள நலகரில் அமைந்துள்ள புதிய முதியோர் இல்லத்திற்குக் குடிபெயர உள்ளனர். அங்கு அவர்கள் தங்களது இல்லற வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்குவார்கள்.