தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. 74 இடங்களில் வென்ற திமுக-வின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைத்திருக்கிறார். அரசுப் பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
நேற்று முதல்வர் பதவிப் பிரமாணம் முடிந்ததும், முதல்வர் ஆற்றிய உரையில், “முந்தைய ஆட்சி ரூ10-லட்சத்துக்கும் மேல் கடன் வைத்திருக்கிறது. எது எது எந்த லட்சணத்தில் இருக்கிறது என இன்னும் அரசுக்குள் சென்று பார்க்கவில்லை’ என விமர்சித்திருந்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போதும், திமுக மீதான விமர்சனங்களை மையப்படுத்தியே அவரின் பிரசாரம் அமைந்திருந்தது. இந்த நிலையில்தான் பதவிப் பிரமாணத்துக்குப் பிறகான விமர்சனமும் அணுகப்பட்டது.
முதல்வர் விஜய்-யின் விமர்சனத்துக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் தன் எக்ஸ் பக்கத்தில், “ஒரு அரசுக்கு என்ன வரம்போ அந்த வரம்புக்குள்ளேயேதான் கடன் வாங்கியிருந்தோம். இதுபோன்ற சிக்கலைக் கடந்துதான் தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தோம். எனவே, மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற மனது இருந்தால் போதும்.” என பதிலளித்திருந்தார்.