நெஞ்சுவலி இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம்
மாரடைப்பு ஏற்பட்டால் எல்லோருக்கும் கடுமையான நெஞ்சுவலி இருக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலே முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இதனுடன் வழக்கத்திற்கு மாறாக வியர்வை வருதல், குமட்டல் (Nausea), தலைச்சுற்றல், அதிகப்படியான சோர்வு அல்லது நெஞ்சு, முதுகு, தாடை, கைகளில் அசௌகர்யம் ஏற்படலாம்.
இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்ற வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே, காரணம் தெரியாமல் ஏற்படும் மூச்சுத்திணறலை வெறும் சோர்வாகவோ வயது அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னையாகவோ கருதி அலட்சியப்படுத்தக் கூடாது.

யாருக்கு ரிஸ்க் அதிகம்?
உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure), நீரிழிவு நோய், ரத்தத்தில் அதிக கொழுப்பு (High Cholesterol), உடல் பருமன் (Obesity), புகைப்பழக்கம் மற்றும் குடும்பத்தில் இதய நோய் பாதிப்பு இருந்திருப்பது போன்றவை இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.
ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்கள், புதிதாக மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ அல்லது ஏற்கெனவே இருந்த மூச்சுத்திணறல் அதிகரித்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.