தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் உள்ள இடைக்கல் என்ற கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு குழந்தை மிகவும் பொறுமையாகப் படிப்பதால் அந்தக் குழந்தையின் படிப்பை நிறுத்த ஒரு பள்ளி நிர்வாகம் முயல்கிறது என்று ஒரு காணொளி வெளியானது.
அந்தக் காணொளி பதிவிட்ட குழந்தையின் தாயாரிடம் விசாரித்த போது, “எனக்கு இரண்டு மகள்கள், முதல் மகள் மூன்றாவது வகுப்பும் இரண்டாம் மகள் ஒன்றாம் வகுப்பும் படிக்கிறார்கள். போன புதன்கிழமை முதல் மகளுக்கு பள்ளியில் தேர்வு வைத்துள்ளனர்.
அவள் அதை முழுமையாக எழுதவில்லை என்று என்னிடம் வீட்டிற்கு வந்து கூறினாள். அதைக் குறித்து அவளின் பள்ளி ஆசிரியரிடம் விசாரித்த பொழுது, அந்த ஆசிரியர், எனது மகள் மிகவும் பொறுமையாகப் படிக்கின்றாள்.
மேலும் வரும் மூன்றாவது பாடம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அதைப் படிக்கும் தகுதி என் மகளுக்கு இல்லை என்றும் கூறி விட்டார்.
எனது மகளை இவ்வளவு தரம் தாழ்த்தி கூறுகிறார்களே என்று, இது குறித்து அந்தப் பள்ளியின் மேலாளரிடம் இவரைப் பற்றி புகார் கூறச் சென்றோம்.
முதலில் அந்த ஆசிரியர் மீது புகார் கடிதம் கொடுக்கச் சொன்னார். பின்னர் புகார் கடிதம் பெற்ற சிறிது நேரத்திலேயே எங்களை நோக்கி சத்தம் போட்டு, “உங்கள் மகள் இந்தப் பள்ளியில் படிக்க தகுதியில்லை. அதனால் அவளுக்கு வேண்டுமானால் மாற்றுச்சான்றிதழ் (T.C) வழங்குகிறோம். பெற்றுச்செல்லுங்கள்” என்று கூறிவிட்டு மேலும், “எங்கு சென்று புகார் அளிக்கிறீர்களோ அளியுங்கள்” என்று கூறி எங்களைச் சத்தம் போட்டு பள்ளியில் இருந்து அனுப்பிவிட்டார்.