கால்பந்து… உணர்ச்சிகளின் உச்சம்! கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரோடு கலந்த இந்த விளையாட்டில், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தயாராகிவிட்டது. ஆம், இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக் கோப்பையில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியுடன் கைகோத்து களமிறங்குகிறது உலகின் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள்.
லயோனல் மெஸ்ஸி தலைமையிலான படைக்கு இனி மூளையாக செயல்படப் போவது கூகுளின் ‘ஜெமினி’ (Gemini) AI தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?!
புதிய டீல்… புதிய தொடக்கம்!
அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்துடன் கூகுள் செய்துகொண்டுள்ள இந்த ஒப்பந்தம், ஒரு சாதாரண ஸ்பான்சர்ஷிப் அல்ல. இது ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு தொழில்நுட்பக் கூட்டணி. இந்த ஒப்பந்தத்தின்படி, ஜெமினி AI இனி அர்ஜென்டினா தேசிய அணியின் பிரதான உலகளாவிய ஸ்பான்சராக இருக்கும். இதன் வெளிப்பாடாக, அர்ஜென்டினா வீரர்கள் அணியும் பயிற்சி ஜெர்ஸியில் இனி ஜெமினி லோகோ இடம்பெறும். ஆனால், இது வெறும் விளம்பரத்திற்கானது மட்டுமல்ல. களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஜெமினியின் ஆதிக்கம் இருக்கப்போகிறது.

களத்தில் என்ன செய்யும் ஜெமினி?
இனி அர்ஜென்டினாவின் ஆட்ட வியூகங்கள், வீரர்களின் ஃபிட்னஸ், மற்றும் அணி தொடர்பான தரவுகள் அனைத்தையும் அலசி ஆராயப் போவது இந்த AI தான். பயிற்சியாளர் குழு, எதிரணியின் பலம் மற்றும் பலவீனங்களை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ளவும், ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப வியூகங்களை மாற்றியமைக்கவும் ஜெமினி மென்பொருளைப் பயன்படுத்தும்.
‘வயர்டு’ (WIRED) பத்திரிகையின் தகவல்படி, இந்த AI மாடல்கள் எதிரணியின் தரவுகளை உடைத்து, ஆட்டத்திற்கான முடிவுகளை மிக விரைவாக எடுக்க வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் உதவும். தரவுகளை அலசுவதில் செலவாகும் நேரத்தை இது வெகுவாகக் குறைக்கும். இதன் மூலம், மெஸ்ஸியின் படை இன்னும் கூர்மையாகவும், வேகமாகவும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.