Tamilnadu
oi-Vishnupriya R
திருப்பத்தூர்: மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டேன் என திருப்பத்தூரில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆவேச பேசியுள்ளார்.
திருப்பத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெள்ளி நாணயம், ஊக்கத் தொகையை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது. காவிரி படுகையிலிருந்து வரும் தண்ணீர், கர்நாடகத்தை விட தமிழ்நாட்டிற்குத்தான் முழுச் சொந்தம்.
கர்நாடகம் இதற்குச் சொந்தம் கொண்டாடுவது மாற்றாந்தாய் போன்றது. ஆனால், தமிழ்நாடு இந்த நீரை தாயைப் போலக் கொண்டாடும் உரிமை படைத்தது. இந்த ஓரவஞ்சனையை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கர்நாடகாவிலும், கேரளாவிலும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்கிறது, இருப்பினும், நான் சார்ந்திருக்கும் கூட்டணி அரசாங்கத்தின் காங்கிரஸ் அமைச்சர் என்ற முறையில் தைரியமாகச் சொல்கிறேன்.
மேகதாது அணையில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க நான் அனுமதிக்க மாட்டேன். தமிழ்நாட்டின் இறையாண்மையும், சுயாட்சியும் மக்களின் விருப்பமுமே நமக்கு முக்கியம்.
லஞ்சத்தையும் ஊழலையும் முற்றிலும் ஒழித்துவிட முடியும். ஆனால் ஜனநாயகத்தில் மக்கள் நலன் சார்ந்த ‘சிபாரிசுகளை’ யாரும் புறக்கணித்துவிட முடியாது. சிபாரிசுகள் என்பது தனிநபர் சார்ந்த சுயநலப் பிரச்சினையாக இருக்கக் கூடாது.
அவை நியாயமான, மக்கள் பிரச்சினைகளை உள்ளடக்கிய கோரிக்கைகளாக இருக்க வேண்டும். ஒரு குழுவோ அல்லது அமைப்போ கூட்டு முயற்சியுடன் மக்கள் நலனுக்காக எடுக்கும் முடிவுகளுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என அனைவரும் மதிப்பளித்தே ஆக வேண்டும். இவ்வாறு விஸ்வநாதன் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு, இதுவரையில், அரசு சார்பில் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் கல்வியியல் கல்லூரி இல்லையெனவும், அதனை கொண்டு வர வேண்டும் என்று திருப்பத்தூர் சட்டசபை உறுப்பினர் திருப்பதி கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், திருப்பத்தூருக்கு பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி ஆகிய நான்கு கல்லூரிகள் வேண்டும் என கோரிக்கைகள் வந்துள்ளன. இவற்றை நிறைவேற்ற ஏற்பாடுகளை செய்வதாக விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.