காவிரிப் படுகை என்பது ஒரு பற்றாக்குறை படுகை என நீதிமன்றங்கள் குறிப்பிட்டு, அதன் ஒட்டுமொத்த நீரையும் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளித்துவிட்டன. எனவே, அங்கு புதிய திட்டங்களைச் செயல்படுத்த இயலாது. இதனால், மேகதாது அணை திட்டத்திற்குத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்தவொரு அனுமதியையும் ஒன்றிய அரசு வழங்கக் கூடாது.
பிற மாநிலங்களின் இசைவின்றி கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப் படுகையின் வேறு எந்த இடத்திலோ புதிய அணை அல்லது நீர்த்தேக்கங்களை உருவாக்கக் கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்துமாறும், கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளக் குழுமம் பரிசீலிக்கக் கூடாது என்றும் ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முழுமையாக முறியடித்து, தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காகத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது முழுமையான, ஒருமனதான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் தீர்மானத்தை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முழு மனதோடு ஆதரித்து நிறைவேற்றித் தர வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.