மேகதாது: "பாஜக தலைவர் வீட்டில் சதியாலோசனைக் கூட்டம்; கர்நாடகாவுக்கு பச்சைக்கொடி"- வைகோ சொல்வது என்ன?

Spread the love

ம.தி.மு.க நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நெல்லைக்கு வருகை தந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்குப் பச்சைத் துரோகம் செய்து வருகிறது.

2015-ஆம் ஆண்டு, கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த அனந்தகுமார் வீட்டில் இதற்கான சதியாலோசனைக் கூட்டம் ரகசியமாக நடைபெற்றது. அதில், அப்போதைய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்று, மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மறைமுகமாகப் பச்சைக்கொடி காட்டினார்கள்.

DMDK - Vaiko
DMDK – Vaiko

உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத் தீர்ப்புகளின்படி, கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா எந்த அணையையும் கட்ட முடியாது. ஆனால், கர்நாடக முதல்வர் சிவக்குமார் சட்டத்தை மதிக்காமல் அணை கட்டுவோம் என ஆணவமாகப் பேசி வருகிறார். இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசும், கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் கைகோத்துத் தமிழகத்தை வஞ்சிக்கின்றன.

முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக வரும் 17-ஆம் தேதி தென்காசியில் நடைபெற உள்ள செயற்குழுக் கூட்டத்தில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவிப்போம். கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியிலும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியிலும் ஊழல் தலைவிரித்தாடியது.

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, பத்திரப்பதிவுத்துறை என அனைத்துத் துறைகளிலும் குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷன் நிர்ணயிக்கப்பட்டு வசூல் வேட்டை நடந்தது. ஆசிரியர்கள், செவிலியர்கள் பணியிட மாறுதலுக்குக் கூட பல லட்சம் ரூபாய் லஞ்சம் கைமாறியது. அரசு அலுவலகங்கள் அனைத்தும் கலெக்‌ஷன் சென்டர்களாகவே செயல்பட்டன.

ஆனால், தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நேர்மை கடைப்பிடிக்கப்படுகிறது. பல அதிகாரிகள் லஞ்சம் வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.

ஊழலுக்கான வருமான வாசல் முழுமையாக அடைக்கப்பட்டுவிட்டதால், ஊழலில் பழகிப் போன அதிகாரிகள் லஞ்சம் வாங்க முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. அதனால் தற்போதைய நேர்மையான த.வெ.க அரசை முடக்க சில அதிகாரிகள் சதி செய்கிறார்கள்.

DMDK - Vaiko
DMDK – Vaiko

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் காவல்துறை என்பது ஒரு கார்ப்பரேட் முதலாளிக்காக வேலை பார்க்கும் கூலிப்படையாக மாற்றப்பட்டது. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது 14 அப்பாவி மக்கள் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆனால், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, அதே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கி மனிதநேயத்தோடு செயல்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் முயன்றபோது, அவரைச் சந்திக்கக் கூட முதல்வர் விஜய் அனுமதி அளிக்கவில்லை. மக்கள் விரோத ஆலைகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை என்பதை அவர் ஆணித்தரமாக நிரூபித்துள்ளார்.

இலங்கையில் யாழ்ப்பாண நூலகத்தை சிங்களக் காடையர்கள் எரித்ததைப் போல, இங்கு பகுத்தறிவு ஆசான் பெரியார் பெயரிலான அறிவுச்சோலை நூலகத்தில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இந்த ஊழலுக்கு முந்தைய மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்.

இது அறிவுலகத்தின் மீது தொடுக்கப்பட்ட மாபெரும் தாக்குதல். இந்த முறைகேடு குறித்து விசாரிக்கக் குழு அமைத்துச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாக மலை உச்சியில் தீபம் ஏற்றுவதுதான் வழக்கம். இப்போது திடீரென உச்சியில் தீபம் ஏற்றக்கூடாது எனக் கூறுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். தொன்றுதொட்டு வரும் நடைமுறைகளை மாற்றுவது ஏற்புடையதல்ல.

DMDK - Vaiko
DMDK – Vaiko

இந்த ஆட்சி 6 மாதத்தில் கவிழ்ந்துவிடும் எனச் சிலர் பகல் கனவு காண்கிறார்கள். மக்களிடம் இந்த அரசுக்கு அமோக வரவேற்பு உள்ளதால், அடுத்தடுத்து வரப்போகும் இடைத்தேர்தல்கள் மற்றும் பொதுத்தேர்தல்களிலும் முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதை நூலான ‘Belonging’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க டெல்லி வருமாறு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், கட்சிப் பணிகள் காரணமாக அந்த விழாவில் பங்கேற்கவில்லை” எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *