முன்னதாக, அணையின் முக்கிய சுவர் அமையப்பெறும் (SITE-Y) நேர்கோட்டில் உள்ள இடங்களின் மணல் தன்மை, பெருங்கற்களின் தன்மை போன்ற அனைத்து விபரங்களும் அந்த இடங்களில் துளையிட்டு அல்லது தோண்டி எடுத்து பரிசோதித்து பதிவு செய்யப்பட்டன. ஆராய்ச்சிக்கு உட்படுத்தி குறிப்புகள் பெறப்பட்டன. இவற்றுள் கீழ்க்கண்ட முக்கிய விடயங்கள் கவனம் பெற்றன :
1. ஆற்றின் இடது கரையில் (கிழக்கு திசை) அமைந்த மலையின் சரிவான அமைப்பு.
2. ஆற்றின் இடது கரையிலிருந்து 300 மற்றும் ஆயிரமாவது அடிக்கு இடையில் அமையப்பெற்ற மண்ணும், மணலும் கலந்த வண்டல் படிமம்.
3. 1000 அடி முதல் 2200 அடிக்கு இடையில் அமையப்பெற்ற சேதமடைந்த மற்றும் குறையுடன் அமையப்பெற்ற பாறைகள்.
4. அணையின் 2300 மற்றும் 2800 வது அடி நீளத்தில் அமையப்பெற்ற “டீப் ஹோல்” (DEEP HOLE) எனப்படும் அதிகபட்ச ஆழமான அஸ்திவாரப் பகுதியில் அமைந்த பிளவுகள். இவற்றை நீக்கினால் மட்டுமே 50 லிருந்து 60 அடி ஆழத்தில் கெட்டிப்பாறைகள் அமையப் பெறும் வாய்ப்பு கண்டறியப்பட்டது.
5. அணையின் நீளத்தில் 3600 வது அடியில் “ஹில் 60” (Hill 60) என பெயரிட்டு அழைத்த இடத்தில் அடியில் பிளவு பட்ட மற்றும் சேதமடைந்த பாறைகள் உள்ளதை உடைத்து வெளியே எடுக்கப்பட வேண்டும்.
6. 4000ஆவது அடி நீளத்தில் “லிட்டில் டீப் ஹோல்” (LITTLE DEEP HOLE) என பெயரிட்டு குறிக்கப்பட்ட இடத்தில் 70 அடி ஆழத்துக்கு பாறைகளை பெயர்த்தெடுத்து உறுதி செய்யப்பட வேண்டும்.
7. குறுகிய அளவு அழுத்தம் அமையப்பெற்ற இடமான 4300 வது அடி.
8. கற்பாறைகள் மற்றும் சேதமடைந்த பாறைத் திட்டுக்கள் மேற்புறமாக அமையப்பெற்ற மிகக் கடினமான சிறந்த பாறை. இது சார்னோகைட் ராக்ஸ் (Charnockite Rocks) எனப்படும். இது அணை நீளத்தின் 4600 அடி மற்றும் 5300 வது அடிக்கு இடையில் அமைந்திருந்தது. மேற்கண்ட விடயங்களை மனதில் இருத்தி அணைக்கான அடித்தளம் (அஸ்திவாரம்) திட்டமிடப்பட்டு அதை செயல்படுத்த எத்தனித்தனர்.