அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்திரி’.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆக.21-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டி இருந்தனர்.

இந்நிலையில் ‘மொத ராத்திரி’ படத்தைப் பார்த்த நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார்.
“நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ரசித்தேன், ‘மொத ராத்திரி’ படத்தின் திரைக்கதை, கண்களைக் கவரும் விசுவல், கதை சொல்லல் மற்றும் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு வாய்விட்டு சிரித்ததுடன், ரசித்துக் கைதட்டவும் செய்தேன்.
இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள், உங்களுக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதையைச் சமர்ப்பிக்கிறேன், இந்தப் படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று” என்று பாராட்டியிருக்கிறார்.