யாசினி.. கேள்.. சொல் – சிறுகதை | My vikatan short story about friendship and breakup

Spread the love

பூவிழி ஏதோ தவறு செய்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தது யாசினியின் மனம். பயத்தில் யாசினி எதுவும் பேசவே இல்லை. பூவிழியைத் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென அங்கிருந்து இறங்கி ஓடத் தொடங்கினாள். யாசினியின் பின்னால் அவள் மனதுடன் பேசியவாறு நிதானமாக நடந்தாள் பூவிழி. யாசினி தன் வீட்டுக்குள் நுழைந்து வேகமாகக் கதவைத் தாழிட்டு அப்படியே கீழே மடிந்து உட்கார்ந்து அழத் தொடங்கினாள்.

இரவு வரும் வரையிலும் தன் வீட்டுக்குள் அமைதியாகக் காத்திருந்த பூவிழி தன் அறையில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டுக் கதவைத் தாழிட்டாள். ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி கண்ணாடியின் முன் வைத்து அதன் முன்னால் தானும் உட்கார்ந்தாள். எந்தச் சலனமும் அவளிடம் இல்லை.

மெழுகுவத்தியின் ஒளியை யாசினியாக நினைத்து அவளுடன் உரையாடத் தொடங்கினாள் பூவிழி. “யாசினி நீ உண்மை பேசுகிறாயா என்பதை என்னிடம் உண்மையாகச் சொல்ல வேண்டும். உன் மனதை நான் வசப்படுத்தப் போகிறேன். நீளமான உறக்கத்தில் உன் மனம் அமிழட்டும். நீ உன் மனதில் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்பதைக் காட்டி விடு. என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பதை நீ சொல்லாமலே நான் தெரிந்து கொள்ள வேண்டும்.” இப்படியே இரவும் முழுவதும் பூஜையில் ஆழ்ந்து கிடந்தாள் அவள். 

காலையில் யாசினியுடன் பேசி தன்னைப் பற்றிய அவள் எண்ணமதை அறிய அவள் வீட்டுக்கு விரைந்தாள் பூவிழி. வீட்டின் வெளிப்புறம் பெரிய பூட்டு தொங்கியது. 

செய்வதறியாது தயங்கி நின்ற அவளை நோக்கி வந்த பக்கத்து வீட்டுப் பெண் “ராத்திரி உங்க வீட்டுக்கு வந்து திரும்பிய யாசினி பேய் பிசாசு பிடிச்ச மாதிரி புலம்பிக் கொண்டே இருந்தாள். டாக்டரிடம் போகனும்னு ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டாள். விடிந்ததும் அவளை அழைச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனாங்க. அவங்க மனோதத்துவ டாக்டரிடம் போகச் சொன்னதால அங்கே போயிருக்காங்க. நீயும் அவளும் ரெம்ப நெருக்கமாச்சே. படிக்கிற இடத்தில் ஏதாவது பிரச்சனையா? நீ வந்தால் உன்னிடம் விபரம் சொல்லச் சொன்னாங்க யாசினியின் அம்மா” என்றாள்.

“எந்த பிரச்சனையும் இல்லை ம்மா. நேத்து கூட என்னோடு நல்லாத்தானே பேசினாள்! நான் போய்ப் பார்க்கிறேன்” என்று சொன்ன பூவிழி தன்னைப் பற்றி யாசினி தெரிந்து கொண்டதை உணர்ந்தாள். தான் உணர்ந்ததை வேறு யாரிடமாவது யாசினி சொல்லி விட்டால் என்ன செய்வதென யோசித்தபடியே மருத்துவமனைக்கு விரைந்தோடினாள் அவள்.

அங்கே படுக்கையில் கிழிந்த பழந்துணிபோல் நைந்து கிடந்த யாசினியைப் பார்த்து முகத்தை மூடிக் கொண்டு சத்தமில்லாமல் அழுத பூவிழியைச் சமாதானப் படுத்தினாள் யாசினியின் அம்மா.

அந்நேரம் உள்ளே வந்த டாக்டர் “தூக்கம் இல்லாமல் இருப்பதால் கஷ்டப்படுறாங்க. தூக்கத்துக்கு முதலில் மருந்து கொடுப்போம். இதை வாங்கிட்டு வாங்க” என்று மருந்துச் சீட்டை யாசினியின் அம்மா கையில் கொடுத்தவர் பூவிழியை யோசனையுடன் பார்த்தார்.

“நான் யாசினியின் தோழி பூவிழி. மெஸ்மரின் புத்தகத்தை அவள் புத்தகப் பையில் வச்சிருந்ததைப் பார்த்தேன் டாக்டர்.” பூவிழி சொல்ல வந்தது புரியாமல் மகளைப் பார்த்துக் கலங்கி நின்றாள் அவள் அம்மா.

“அப்படியா? அந்தப் புத்தகத்தை எடுத்து வாங்க. நான் பார்க்கனும்?” என்று டாக்டர் சொல்லவும் பூவிழி தன் மனதிற்குள் நொடியில் திட்டங்களை வகுத்தாள்.

“எதையோ பார்த்துப் பயத்துட்டதா டாக்டர் சொன்னாங்க? அது அந்தப் புத்தகமாக இருக்குமோ?” என்று அழுத அம்மாவின் சத்தம் கேட்டு எழுந்த யாசினி பூவிழியை நோக்கிக் கைகளை நீட்டியவாறு புரியாத வார்த்தைகளில் கத்தினாள்.

“என்னிடம் மருந்துச் சீட்டைக் கொடுங்க ம்மா. நான் வாங்கிட்டு வாறேன்” என்ற பூவிழியை யாசினியின் அருகே இருக்கச் சொல்லிய அம்மா மருந்துச் சீட்டுடன் வெளியேறினாள். யாசினியை நெருங்கிக் குனிந்து கண்ணடித்துச் சிரித்த பூவிழி யாசினியின் கன்னங்களில் முத்தமிட்டாள்.

“சீ.. நடிக்காதே பூவிழி. நேற்று உன் வீட்டுக்குள் வந்து மெஸ்மரிசம் பற்றி நீ படிச்ச புத்தகத்தை நானும் பார்த்தேன். அதில் என்னவெல்லாம் எழுதி இருக்கோ அதையெல்லாம் நீ எனக்கு செஞ்சதையும் தெரிஞ்சுக்கிட்டேன். இரவு இருட்டு அறைக்குள் பைத்தியம் போல் நீ உட்கார்ந்து இருந்ததையும் பார்த்தேன். என் மூளை தீப்பிடிச்சு எரியுது. உன் மேல நான் வச்சிருந்த உண்மையான நட்புக்காக உன் பேரைச் சொல்லாமல் டாக்டரிடம் போகணும்னு அடம் பிடிச்சு இங்க வந்தேன். என்னை நான் சரி பண்ணிக்கனும். உன்னிடம் இருந்து விலகனும். இனிமே என் முகத்தில் விழிக்காதே! போயிடு!” வெறுப்புடன் பேசினாள் யாசினி.

“மெஸ்மரிஸம் பற்றிய புத்தகம், அதுக்கு நான் செய்த செய்முறை பயிற்சி எல்லாம் இரண்டு இரண்டாகச் செய்து ஒன்றை உன் புத்தக அலமாரியிலும் வச்சுட்டேன் யாசினி. இப்போது அது உன்னிடம் மட்டுமே இருக்குது. என்னோடதை எடுத்து நாம உட்கார்ந்து பேசும் குளத்தில் விட்டெறிஞ்சுட்டேன்.” பூவிழியின் பேச்சைக் கேட்ட யாசினி பயத்தில் மயங்கினாள்.

யாசினியின் அம்மா மெஸ்மரிசம் பற்றிய புத்தகத்தையும் பயிற்சிக்கான வட்டங்கள் வரைந்த அட்டை மற்றும் பென்சிலில் வளையத்துடன் கட்டிய கயிறு என அனைத்தையும் எடுத்து வந்து டாக்டரிடம் காட்டினாள். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *