யாருப்பா நீ.. வேகப்பந்துவீச்சாளர் டூ ஈட்டி எறிதல்.. நீரஜ் சோப்ராவையே ஓரம்கட்டிய இலங்கை கோல்டன் பாய்! | Sri Lanka’s U-18 Pacer Rumesh Pathirage Outshines Neeraj Chopra to Win Commonwealth Javelin Gold

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: இலங்கை யு18 அணியின் வேகப்பந்துவீச்சாளரான ருமேஷ் பதிராகே, திடீரென ஈட்டி எறிதல் போட்டியில் ஆர்வம் கொண்டு இந்தியாவின் நீரஜ் சோப்ராவையே ஓரங்கட்டி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று ருமேஷ் பதிராகே சாதனை படைத்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த முறையும் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாதனை படைப்பார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ராவால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. நீரஜ் சோப்ரா 85.83 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

Neeraj Chopra

அதேபோல் இந்தியாவின் யஷ்வீர் சிங் 85.41 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். தங்கப் பதக்கத்தை இலங்கையைச் சேர்ந்த ருமேஷ் பதிராகே 89.75 மீட்டர் தூரம் எறிந்து கைப்பற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஈட்டி எறிதலில் ஜாம்பவான்களாக திகழும் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், உலக சாம்பியன் வால்காட் ஆகியோரையே பின்னுக்கு தள்ளியுள்ளார் ருமேஷ்.

அதுமட்டுமல்லாமல் ருமேஷ் பதிராகே இலங்கை யு18 அணியின் வேகப்பந்துவீச்சாளராக இருந்தவர் என்பது மேலும் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது. யு18 கிரிக்கெட்டில் இஷான் மலிங்காவுடன் ஆடியவர். கிரிக்கெட்டராக வேண்டும் என்ற ஆசையுடன் வளர்ந்து வந்த ருமேஷ் பதிராகே, 18 வயதிலேயே 130 முதல் 134 கிமீ வேகம் வரை பந்துவீசி இருக்கிறார்.

இதனால் ருமேஷ் பதிராகேவுக்கு கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவரின் பயிற்சியாளர் டோனி பிரசன்னா ஈட்டி எறிதல் பக்கம் கொண்டு சென்றுள்ளார். இலங்கைக்காக ஈட்டி எறிதலில் பங்கேற்று 85 மீட்டர் தூரத்திற்கு மேல் வீசிய முதல் வீரர் ருமேஷ் பதிராகே தான். இதனால் இலங்கை நாட்டின் கோல்டன் பாயாக ருமேஷ் மாறியுள்ளார்.

இதுதொடர்பாக ருமேஷ் பதிராகே பேசுகையில், பயிற்சியாளர் டோனி தான் என்னை ஈட்டி எறிதல் பக்கம் கொண்டு வந்தார். நான் அடிப்படையை சரியாக கற்றுக் கொண்டால், என்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதை டோனி கூறி கொண்டே இருப்பார். அவர் எனக்கு வெறும் பயிற்சியாளர் மட்டுமே அல்ல.. விளையாட்டு மட்டுமல்லாமல் வாழ்க்கையையும் கற்றுக் கொடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *