`யார் பெரிய ரௌடி?’ – போட்டியில் நடந்த கொலை; துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த கடலூர் பெண் இன்ஸ்பெக்டர்

Spread the love

“காலையில் வாங்கிய அடிக்கு இப்போது நியாயம் கேட்டு வந்திருக்கானுங்க…”

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி பிரித்விராஜன். சரித்திரப் பதிவேடுக் குற்றவாளியான இவர் மீது புதுச்சேரி மற்றும் தமிழகக் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

அதே ஊரைச் சேர்ந்த சகோதரர்களான அன்பரசன் மற்றும் அருளரசன் என்ற இருவருடன், தீபவாளியன்று மதியம் மது அருந்தினார் பிரித்விராஜன். மதுபோதை தலைக்கேறியதும், அவர்களுக்குள் யார் பெரிய ரௌடி என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது பிரித்விராஜன், அருளரசனைத் தகாத வார்த்தைகாள் திட்டியிருக்கிறார். அதனால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்ட அன்பரசன்
கைது செய்யப்பட்ட அன்பரசன்

அதையடுத்து அங்கிருந்த சக நண்பர்கள், இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அன்று இரவு மீண்டும் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார் பிரித்விராஜன். அப்போது அங்கு சென்ற அன்பரசனும், அருளரசனும், `ஏன் எப்போதும் எங்களிடம் பிரச்னை செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு ரௌடி பிரித்விராஜன், `காலையில் வாங்கிய அடிக்கு இப்போது நியாயம் கேட்டு வந்திருக்கானுங்க’ என்று பிரித்விராஜன் நக்கலாகக் கூற, இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரௌடி பிரித்விராஜின் கழுத்தில் குத்தினார் அன்பரசன். அதில் பிரித்விராஜன் துடிதுடித்துக் கீழே விழுந்ததையடுத்து, அன்பரசனும், அருளரசனும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதற்கிடையில் ரத்தவெள்ளத்தில் துடித்து விழுந்த ரௌடி பிரித்விராஜனை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அவரது நண்பர்கள். ஆனால் பிரித்விராஜனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ரெட்டிச்சாவடி போலீஸார், தப்பித்துச் சென்ற அருளரசனையும், அன்பரசனையும் தேடி வந்தனர். அதேபோல டி.எஸ்.பி தமிழினியர் தலைமையில் இரண்டு தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. அப்போது புதுக்கடை பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை தனிப்படைப் போலீஸார் சுற்று வளைத்தனர்.

அன்பரசன் சிக்கிக் கொள்ள, அருளரசன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். தொடர்ந்து புதுநகரை அடுத்திருக்கும் எஸ்.புதூர் கிராமத்திலிருக்கும் முந்திரிக்காட்டில் அருளரசன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட அருளரசன்
துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட அருளரசன்

அதனடிப்படையில் கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ முகிலரசன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்றனர். பதுங்கியிருந்த அருளரசனைச் சரணடைந்துவிடுமாறு கூறிய போலீஸார், அருளரசனைக் கைது செய்ய அருகில் சென்றனர். அப்போது தான் வைத்திருந்த கத்தியால் எஸ்.ஐ கையில் வெட்டிய அருளரசன், அங்கிருந்து தப்பியோடினார்.

உடனே சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் இளவரசி, தன்னுடைய கைத்துப்பாக்கியால் அருளசனின் காலில் சுட்டார். அதில் நிலைதடுமாறி விழுந்த அருளரசனை போலீஸார் கைது செய்தனர். அதையடுத்து இருவரும் சிகிச்சைக்காகல் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *