ரகசிய அரசாணை 674: முதல்வர் விஜய்யின் ‘நிழல்’ ஜெகதீஷ் நியமனம் மறைக்கப்பட்டது ஏன்? ஷாக் பின்னணி? | Vijay’s Secret GO 674 Revealed: Why Jagadish Palaniswami’s Appointment Was Hidden for 40 Days!

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

சென்னை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தனி செயலராக ‘The Route’ நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவரின் நியமனம் கிட்டத்தட்ட ஒரு மாதமாக மறைக்கப்பட்டு இப்போதுதான் வெளியே சொல்லப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ‘புதிய அரசியல், வெளிப்படையான நிர்வாகம்’ என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கட்டிலில் ஏறியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். ஆனால், ஆட்சி அமைந்த சில வாரங்களிலேயே கோட்டை வட்டாரத்தில் இருந்து கசியத் தொடங்கியிருக்கும் ஒரு செய்தி, தவெக அரசின் ‘வெளிப்படைத்தன்மை’ மீதே பெரும் கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.

Vijay Jagadish Palaniswami

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச்செயலராக (Private Secretary) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்ட விவகாரமும், அதுதொடர்பான அரசாணை திட்டமிட்டு மறைக்கப்பட்ட விபரமும் தான் இப்போது அரசியல் அரங்கில் ஹாட் டாபிக்!

அடுத்தடுத்த எண்கள்… வெளியான ஒன்று, மறைக்கப்பட்ட இன்னொன்று!

தமிழக அரசின் பொதுத்துறையின் கோப்புகளில் இருந்து வெளிவந்துள்ள தகவல்கள் அதிர வைக்கின்றன. முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட குழு மற்றும் சிறப்பு அதிகாரிகளின் நியமனங்கள் ஒரே தேதியில், அடுத்தடுத்த கோப்பு எண்களாகத் தான் தயார் செய்யப்பட்டுள்ளன.

அரசாணை எண் 674 (Office Proceedings No: 674): ஜெகதீஷ் பழனிசாமி (முதல்வரின் தனிச்செயலர் நியமனம்)

அரசாணை எண் 675 (Office Proceedings No: 675): ரத்தன் பண்டித் (சிறப்பு அதிகாரி நியமனம்)

வேடிக்கை என்னவென்றால், அரசாணை எண் 675-ன் படி ரத்தன் பண்டித் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட விபரம் அன்றைக்கே ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் முறைப்படி அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முந்தைய எண்ணான 674-ல் இருந்த ஜெகதீஷ் பழனிசாமியின் நியமன அரசாணை மட்டும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தளங்களிலோ அல்லது செய்திக்குறிப்புகளிலோ வெளியிடப்படாமல், இருட்டடிப்பு செய்யப்பட்டது.

40 நாள் ரகசியமும்… வேறுவழியின்றி வந்த ட்விட்டர் பதிவும்!

ஜெகதீஷ் பழனிசாமி என்பவர் முதல்வர் விஜய்யின் நீண்டகால சினிமா மேனேஜர், தி ரூட் நிறுவனத்தின் நிறுவனர், ‘மாஸ்டர்’, ‘லியோ’ படங்களின் இணை தயாரிப்பாளர் மற்றும் தவெக-வின் டிஜிட்டல் பிம்பத்தை கட்டமைக்கும் பிஆர்ஓ (PRO). தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, டெல்லி பயணம் உட்பட முதல்வரின் அனைத்து அரசு சார்ந்த உயர்மட்ட சந்திப்புகளிலும் ஜெகதீஷ் நிழல் போல உடனிருந்தார். எந்தவொரு அரசுப் பதவியும் இல்லாமல் அவர் எப்படி அதிகாரப்பூர்வ கூட்டங்களில் பங்கேற்கலாம் என எதிர்க்கட்சிகளும், நடுநிலையாளர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, அவர் தனிச்செயலராக நியமிக்கப்பட்டார். ஆனால், அந்த அரசாணை ஏறக்குறைய 40 நாட்களாக இருட்டறையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

இறுதியாக, விமர்சனங்கள் முற்றி, வேறு வழியே இல்லாத சூழல் உருவானபோதுதான், ஜெகதீஷ் பழனிசாமி தனது ட்விட்டர் (X) பக்கத்தில் இந்த நியமன விபரத்தை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார். ஜெகதீஷின் அந்த ட்விட் வெளியான பிறகே, ‘அப்படியொரு அரசாணை 40 நாட்களுக்கு முன்பே போடப்பட்டுவிட்டது’ என்ற உண்மையே ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெரியவந்தது.

இதுதான் வெளிப்படையான நிர்வாகமா? – எழும் கேள்விகள்

முதல்வரின் தனிச்செயலர் நியமனம் என்பது ஒன்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியக் கோப்பு அல்ல. நிர்வாக ரீதியாக மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய ஒரு சாதாரண அரசாணைதான். அப்படியிருக்க, ரத்தன் பண்டித் நியமனத்தை மட்டும் வெளியே காட்டிவிட்டு, ஜெகதீஷ் பழனிசாமியின் நியமனத்தை மட்டும் அரசு ஏன் திட்டமிட்டு மறைக்க வேண்டும்?

சினிமாவைத் தாண்டி, அரசு நிர்வாகத்திற்குள் தங்களுக்கு நெருக்கமானவர்களைக் கொண்டுவரும்போது எழும் விமர்சனங்களுக்கு அஞ்சியே இந்த ‘இழுத்தடிப்பு நாடகம்’ அரங்கேறியதா? ஆரம்பத்திலேயே ஒளிவுமறைவு இருந்தால், வரும் நாட்களில் தவெக அரசு எப்படி வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தைத் தரும் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

விஜய்யின் நிழலாக வலம் வரும் ஜெகதீஷின் அதிகாரப்பூர்வ என்ட்ரி, கோட்டையின் ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் வட்டாரத்திலும், தவெக-வின் சீனியர் தலைவர்கள் மத்தியிலும் இப்போதே சலசலப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ‘அரசாணை 674’ கிளப்பியுள்ள இந்த விவாதம், முதல்வர் விஜய்யின் ஆரம்பகால நிர்வாகத் திறனுக்கு விழுந்திருக்கும் முதல் சவாலாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *