“ரசகுல்லா” என வெடிகுண்டை கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்.. கடித்ததும் இளைஞருக்கு நேர்ந்த கதி | Man offered bomb as Rasgulla and 35 year old man dies after bite

Spread the love

India

oi-Nantha Kumar R

போபால்: ரசகுல்லா என்று கூறி நாட்டு வெடிகுண்டை பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்தார். அதனை வாங்கி கடித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் வாய் கிழிந்து அந்த இளைஞர் பலியான நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டம் படாரியா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பரோடியா. வயது 35. இவர் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் தனது குடும்பத்தினருடன் இரவு உணவை முடித்தார். அதன்பிறகு அவர் தனது வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தார்.

Man offered bomb as Rasgulla

குளிர் அதிகமாக இருந்தது. இதனால் அவர் தீமூட்டி அதில் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். இரவு 8 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராம் பஹத் பரோதியா வந்தார். இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்.

அப்போது ராம் பஹத், ராஜேந்திர பரோடியாவிடம் ஒன்றை கொடுத்தார். ரசகுல்லா என்று கூறி நாட்டு வெடிகுண்டை கொடுத்தார். இதனை உண்மை என்று நம்பிய ராஜேந்திர பரோடியா உடனடியாக அதனை வாயில் வைத்து கடித்தார். திடீரென்று நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் வாய் கிழிந்ததோடு, ராஜேந்திர பரோடியா உயிருக்கு போராடினார்.

இந்த சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் ராஜேந்திர பரோடியாவை மீட்டு ஆட்டோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார்.

இதுபற்றி ராஜேந்திர பரோடியாவின் மனைவி சுசிலா பாய் கூறுகையில், ”விலங்குகளை கொல்ல பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டை ரசகுல்லா என்று கூறி என்னுடைய கணவரிடம் ராம் பஹத் கொடுத்துள்ளார். அதனை கடித்ததும் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் என்னுடைய கணவர் இறந்துள்ளார்” எனக்கூறி அழுதார்.

இதுதொடர்பாக கோட்வாலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ராஜேந்திர பரோடியாவின் குடும்பத்தினர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுபற்றி கோட்வாலி போலீஸ் நிலைய பொறுப்பாளர் துர்கா பிரசாத் நாக்புரி கூறுகையில், ”சம்பவம் தொடர்பாக ராம் பஹத் உள்பட 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். இந்த சம்பவம் இரவு நேரத்தில் நடந்துள்ளது. இதனால் ராஜேந்திர பரோடியாவிற்கு அது நாட்டு வெடிகுண்டா? ரசகுல்லாவா? என்பது தெரியவில்லை.

ரசகுல்லா என்று நினைத்து நாட்டு வெடிகுண்டை கடித்ததால் அது வெடித்தது. ராஜேந்திர பரோடியா இறந்துள்ளார். ராம் பஹத் எதற்காக நாட்டு வெடிகுண்டை ரசகுல்லா என்று வழங்கினார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி ராம் பஹத்திடம் விசாரித்தோம். அப்போது சிறுவன் ஒருவன் தான் தனக்கு நாட்டு வெடிகுண்டை தந்ததாக கூறினார். அந்த சிறுவனை பிடித்தும் விசாரித்து வருகிறோம்” என்று கூறினார்.

இந்த வழக்கில் ராஜேந்திர பரோடியாவிற்கு ரசகுல்லா என்று நாட்டு வெடிகுண்டை வழங்க வேண்டிய அவசியம் என்ன? இதில் ராம் பஹத் அல்லது நாட்டு வெடிகுண்டை தந்ததாக ராம் பஹத் கூறும் சிறுவன் உள்ளிட்டோரில் யார் மீது தவறு உள்ளது? இல்லாவிட்டால் பின்னணியில் வேறு யாராவது? இருக்கிறார்களா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *