ரயில் பாதைகள், சாலைகளில் சோலார் பேனல்! ஐரோப்பாவை பின்பற்றும் இந்தியா | India solar panels on railway tracks roads

Spread the love

நமக்கு இது புதுசாகத் தெரிந்தாலும், ஐரோப்பிய நாடுகள் இதில் பல அடிகள் முன்னேறிவிட்டன. உதாரணமாக, நெதர்லாந்தில் மோட்டார்வேயில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட ஒலித் தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 40 முதல் 60 வீடுகளுக்குத் தேவையான பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளும் தங்களது நெடுஞ்சாலைகளில் சோலார் பேனல்களைப் பொருத்தி வருகின்றன. சுவிட்சர்லாந்தில், ரயில் பாதைகளுக்கு நடுவே சோலார் பேனல்களைப் பொருத்தி ஆண்டுக்கு 16,000 கிலோவாட்-மணி (kWh) மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள்.

இந்த உலகளாவிய உத்வேகத்தைப் பின்பற்றி, இந்தியாவிலும் இப்போது மெல்ல அடி எடுத்து வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். டெல்லி மெட்ரோவின் ஓக்லா விஹார் நிலையத்தில், மேம்பாலத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து சோலார் பேனல் (50 kWp) நிறுவப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இது இருபுறமும் மின்சாரத்தை உருவாக்கும் பைஃபேஷியல் பேனல்களைக் கொண்டது. இதேபோல, நமோ பாரத் நெட்வொர்க் மற்றும் வாரணாசியில் உள்ள பனாரஸ் லோகோமோட்டிவ் வொர்க்ஸ் ஆகியவற்றிலும் இந்திய ரயில்வே ‘சோலார்-ஆன்-ட்ராக்’ அமைப்புகளைப் பரிசோதித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (NHAI) டெல்லி-டேராடூன் விரைவுச்சாலையின் மேம்பாலங்களில் சோலார் பேனல்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சின்ன சின்ன முயற்சிகள், இந்திய சூழலிலும் RIPV தொழில்நுட்பம் சாத்தியம்தான் என்பதை நிரூபித்துள்ளன.

இந்தியாவின் சாலை மற்றும் ரயில்வே நெட்வொர்க் மிகப் பெரியது. நம் நாட்டில் 1.4 லட்சம் கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளும், 99,000 கி.மீ நீளத்திற்கு ரயில் பாதைகளும் உள்ளன. சரக்கு போக்குவரத்து மற்றும் மின்மயமாக்கல் அதிகரிக்கும்போது, இந்தப் போக்குவரத்துத் துறையின் மின்சாரத் தேவையும் விண்ணை முட்டும். இந்தத் தேவையை பசுமை எரிசக்தி மூலம்தான் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது அரசின் இலக்கு. ஆனால், நிலப் பற்றாக்குறை இருக்கும் நம் நாட்டில், வழக்கமான சோலார் பூங்காக்களை அமைப்பது ஒரு பெரிய சவால்.

இங்குதான் RIPV ஒரு தீர்வாக உருவெடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவில் ரயில்வே வழித்தடங்கள் மூலம் சுமார் 79 ஜிகாவாட் (GW) மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் 75 ஜிகாவாட் என மொத்தமாக 150 ஜிகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. இதில் ஒரு சிறிய பகுதியை நாம் பயன்படுத்தினால்கூட, அது இந்தியாவின் பசுமை எரிசக்தி இலக்கை எட்டுவதில் ஒரு மைல்கல்லாக அமையும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *