‘ ரவுண்ட் 2க்கு ரெடியான சார்பட்டா பரம்பரை…. சம்பவம் செய்ய தயாராகும் ரங்கன் வாத்தியார் பயலுக! – Kumudam

Spread the love

சார்பட்டா பரம்பரை:

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.

சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2:

அதனைத் தொடர்ந்து, முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று படக்குழுவினர் முன்னரே அறிவித்திருந்தனர். இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், முதல் பாகத்தின் நேரடித் தொடர்ச்சியாக இல்லாமல், அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்ட ப்ரீக்வெல் கதையாக உருவாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பின்னணி:

படத்தின் கதை 1940 மற்றும் 1950களின் சென்னை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் காலகட்டத்தில் நிலவிய குத்துச்சண்டை கலாச்சாரம், சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் சூழலை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திலும் அக்கால சென்னையின் வாழ்க்கை முறையைத் திரையில் விரிவாகக் காண முடியும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை அம்பத்தூரில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு முழுவீச்சில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய தகவலை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *