'ராகுல் காந்தி தன் 7வது பிறந்தநாளை தனிமையில் கொண்டாட காரணம்…' – நினைவுகளைப் பகிர்ந்த சோனியா காந்தி

Spread the love

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது பழைய நினைவுகளைப் பகிரும் வகையில் எழுதப்பட்ட ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற புத்தகத்தில் இந்தியாவில் தனது பழைய நினைவுகளை அதிக அளவில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மகன் ராகுல் காந்தி குறித்தும் பகிர்ந்துள்ளார்.

1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் நண்பர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் வராததால், அவரது ஏழாவது பிறந்தநாள் ஒரு சோகமான நிகழ்வாக மாறியது.

ராகுலின் பிறந்தநாளான ஜூன் 19ம் தேதியன்று, நாங்கள் அப்போதுதான் எங்கள் புதிய இல்லமான 12, வில்லிங்டன் கிரசண்டில் குடியேறி இருந்தோம். ஆனாலும், அவனுக்காக அவனது பிறந்தநாளை ஒரு சிறிய அளவில் கொண்டாட நான் உறுதியாக இருந்தேன். அவன் அழைக்க வேண்டிய நண்பர்களின் பட்டியலை என்னிடம் கொடுத்திருந்தான். அவர்கள் அனைவரும் அவனது முந்தைய பிறந்தநாள் விழாக்களில் கலந்துகொண்ட குழந்தைகளாவர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக எளிமையாகச் சில அலங்காரங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட கேக், தின்பண்டங்கள் மற்றும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவராலும் விரும்பப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் இருந்தது.

பிரியங்கா காந்தி கேக் தயார் செய்து அலங்காரம் செய்ய உதவினார். அவள் ஒரு நாற்காலியில் ஏறி, தன் சகோதரனால் தூக்கிப் பிடிக்கப்பட்டு, வராண்டாவின் கதவுகளில் பலூன்களைத் தொங்கவிட்டாள். ஒவ்வொரு கட்டத்திலும், அம்மா பார், அம்மா பார் – எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கூறுவாள். எல்லாம் விரைவில் தயாராகிவிட்டன. பலூன்கள் முன் வராண்டாவில் உள்ள மேஜையில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குடும்பத்தினர் விருந்தினர்கள் வருகைக்காகக் காத்திருந்த வேளையில், ராகுலும் பிரியங்காவும் ஏற்பாடுகளைக் கடைசியாக ஒருமுறை பார்வையிட்டனர்.

நேரம் கடந்து கொண்டிருந்தது. ராகுலின் நெருங்கிய நண்பனான சித்தார்த் மட்டும் தனியாக வந்தான். இன்னும் சிறிது நேரம் சென்றது. ஏதோ தகவல் பரிமாற்றத்தில் குளறுபடி நடந்திருக்குமோ என்று நினைத்து, ஒவ்வொரு குழந்தையின் பெற்றோருக்கும் போன் செய்தேன். ஆனால், அவர்கள் அளித்த பதில்கள் ஏதோ ஒன்றை மறைப்பது போல விசித்திரமாக இருந்தன. அப்போதுதான் எனக்கு உண்மை புரிந்தது. வேறு எந்தக் குழந்தைகளும் வரப்போவதில்லை. ஆம், நிலைமை உண்மையிலேயே மாறி இருந்தது.

ஏழு வயது சிறுவனுக்கும் அவனது வகுப்புத் தோழர்களுக்கும் இடையிலான அந்த இயல்பான நட்பு, அரசியலால் சிதைந்தது. ராகுலை உற்சாகப்படுத்த அவனது பாட்டியும் நாங்களும் முயன்றபோதிலும், அவன் மிகுந்த மனவேதனையுடன் இருந்தான். பலூன்கள், வெற்று சேர்களுடன் நாங்கள் கேக் வெட்டினோம், ஆனால் அதில் பெரிய உற்சாகம் ஏதுமில்லை. என் மாமியார் என்னிடம் பொம்மைகள் இருந்த பெட்டியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, இதை நாம் வேறொரு சமயம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வருத்தத்துடன் கூறினார்.

ராஜீவ் காந்தி பின்னர் ராகுலுக்கு ஆறுதல் கூற முயன்றார். இது உன் நண்பர்களின் தவறல்ல ராகுல், அவர்கள் மீது கோபப்படாதே என்று அவரிடம் கூறினார். ஒருவேளை உன் குடும்பத்துடன் நட்பாக இருப்பதற்கு அவர்களின் பெற்றோர் அஞ்சலாம். சிலர் அரசாங்கத்தைக் கண்டு பயப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். அது குழந்தைகளுக்கு மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது. அரசியல் கொந்தளிப்பும் பதற்றமும் அவர்களின் வீட்டிலும் வெளியிலும் அவர்களின் வாழ்க்கையைப் பாதித்தன.

ராகுலும் பிரியங்காவும் சில சமயங்களில் தங்கள் பள்ளித் தோழர்களால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்து என்னிடம், ‘அம்மா, மக்கள் ஏன் அப்பாவையும், பாட்டியையும் திருடர்கள் என்று அழைக்கிறார்கள்? அவர்கள் ஏதாவது கெட்ட காரியம் செய்துவிட்டார்களா?’ என்று கேட்டனர். நான் அவர்களை விளக்கி அமைதிப்படுத்த முயற்சிப்பேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *