
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடி தலைமையிலான அணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என்று இரண்டாக பிளவுப்பட்டது. பெரும்பான்மையை விஜய் அரசு நிரூபிக்க வேண்டிய சூழலில், எடப்பாடி அணி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக இருந்தது. ஆனால், சிவி சண்முகம் அணியானது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இத்தகையச் சூழலில், சிவி சண்முகம் அணி ஆதரவோடு தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, ஆதரவளித்த சிவி சண்முகம் அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவெகவோ சிவி சண்முகம் அணியைச் சேர்ந்தவர்களை தன் பக்கம் இழுக்க ஆரம்பித்ததால், அந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் தான் மீண்டும் எடப்பாடி அணிக்கே திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இப்படி, தன் கட்சி நிர்வாகிகளை மீண்டும் கட்சிக்குள்ளேயே இழுப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் எடப்பாடியார், கட்சியை வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அதற்காகத்தான் எம்.ஜி.ஆர் மாளிகையில் இருந்து ராவணன் குடிலுக்கு தூது ஒன்றை அனுப்பியுள்ளாராம் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியார்.
இதுகுறித்து எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்களில் விசாரித்தபோது, ”தவெ.க. ஆளும் கட்சியாகிவிட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சி இடத்துக்கு தி.மு.க. வந்துவிட்டது. மூன்றாவது இடத்தில் உள்ள அ.தி.மு.க.வையும் வேலுமணி -சி.வி.சண்முகம் அணி பலவீனப்படுத்திவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் வருகிற உள்ளாட்சித் தேர்தலில்கூட அ.தி.மு.க. வெற்றிபெற முடியாது என்று கணக்குப் போடும் எடப்பாடி, நான்காவது பெரிய கட்சியாக உள்ள நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்துவிட துடிக்கிறார்” என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், நாதகவுடன் கூட்டணி வைப்பதற்காக அடுத்துவரும் ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவுடன் சீமானை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் எடப்பாடியார். இது தொடர்பாக சீமானுக்கும் தகவல் பாஸ் செய்யப்பட்டிருக்கிறது என்றும், ஆனால் அவரிடம் இருந்து எந்த சிக்னலும் வரவில்லை என்றும் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராவணன் குடிலுக்கு பறந்துள்ள எம்.ஜி.ஆர் மாளிகையின் தூது, அதிமுகவிற்கு கைக்கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.