ரிப்போட்டர் லீக்ஸ்……சொந்தக் காசில் சூனியம் நொந்துபோன அறிவாலயம்! – Kumudam

Spread the love

தி. மு.க.வின் தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணத்தை அறிய 36 பேர் கொண்ட கள ஆய்வுக்குழுவை மாநிலம் முழுவதும் அனுப்பி வைத்திருந்தார் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின். அந்தக் குழு, கிளைச் செயலாளர்கள் தொடங்கி மாஜி அமைச்சர்கள் வரை ஆயிரக்கணக்கான நிர்வாகிகளை சந்தித்து, கேட்டறிந்த கருத்துக்களின் அடிப்படையில் விரிவான அறிக்கையையும் தயாரித்திருக்கிறது. அதில், ‘கழகத்தை அடியோடு புரட்டிப்போடும் வகையில் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே கட்சி இனி உருப்படும்’ என்று எரியும் நெருப்பாக எச்சரிக்கை வரிகளை வைத்திருப்பதுதான் கட்சித் தலைமையின் ஹார்ட் பீட்டை எகிறச் செய்யும் அரசியல் அணுகுண்டு!

அப்படி என்னதான் இருக்கிறது அந்த அறிக்கையில்? ‘அமைச்சர்களாக இருந்தவர்களும், கட்சி முக்கிய நிர்வாகிகளும் கொஞ்சம் மனசாட்சியுடன் உழைத்திருந்தால் கூடுதலாக இன்னும் 20 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கலாம். பல அமைச்சர்களும், தலைமை நிர்வாகிகளும் கட்சிக்கும், மக்களுக்கும் துரோகம் செய்துள்ளனர்’ என தி.மு.க. தலைமைக்கு ஒப்படைக்கப்பட்ட அந்த ரிப்போர்ட்டின் ஆரம்ப வரிகளே இப்படி அதிர்ச்சியடையவைக்கின்றன. அறிக்கையின் சாராம்சம் இதுதான்..

சேகர்பாபு – மா.சு. அதிகார ஆதிக்கம்!

சென்னை மண்டல அமைச்சர்களாக இருந்தசேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீது மக்கள் மற்றும் சொந்தக் கட்சியினர் என இருதரப்பிலுமே கடும் அதிருப்தி. தலைநகரில் தன்னைத் தாண்டி யாருமே தலைவரை நெருங்கிவிடக் கூடாது என்று சேகர்பாபு காட்டிய ஆதிக்கமும், அதைக் கண்டிக்காத தலைமையின் அலட்சியத்தையும் கடுமையாகவே வசைபாடி யிருக்கிறார்கள் தொண்டர்கள். இந்த போக்குதான் கொளத்தூரில் ஸ்டாலின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். மா.சு. வசமிருந்த சுகாரத்துறையில் தி.மு.க.வினர் தங்கள் குடும்பத்தினருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கக்கூட அலைந்து திரிந்திருக்கிறார்கள். கட்சிக்காரர்களாகவே இருந்தாலும் அமைச்சர்களின் உதவியாளர்களை ‘கவனித்தால்தான்’ காரியம் நடக்கும் என்கிற நிலை நீடித்தது. சொல்லப் போனால், இருவரையுமே அதிகார போதை கண்களை மறைத்துவிட்டது என்கிறது அறிக்கை.

நேரு,வேலு வானளாவிய அதிகாரம்!

நேரு, வேலு ஆகிய இருவருமே தி.மு.க.வை தங்களால் மட்டுமே கரையேற்ற முடியும் என்ற வானளாவிய அதிகாரத்துடனே சுற்றிவந்தார்கள். கீழ்நிலை நிர்வாகிகளோ, தொண்டர்களோ நெருங்கிப் பேசுவதையே அவர்கள் அனுமதிக்கவில்லை. இரு தரப்புக்குமே எல்லா மண்டலங்களிலும் ஒரு குரூப் இருக்கிறது. தங்களுக்குரிய மண்டலத்துக்கு இருவரும் செல்லும்போதெல்லாம், அந்த குரூப்பே வேலியாக நின்றுகொண்டு, விசுவாசமிக்க தொண்டர்களை உதாசீனப்படுத்தியிருக்கிறது. இதற்கு அன்பளிப்பாக பிரபல கோயில்களில் அறங்காவலர் குழுத் தலைவர் பதவி, ரோடு முதல் காடு வரை அத்தனையிலும் கான்ட்ராக்ட்டுகளை அந்தக் குரூப்புக்கு வாரி வழங்கியிருக்கிறார்கள் அமைச்சர்கள்.

அ.தி.மு.க.வை குளிப்பாட்டிய அமைச்சர்கள்!

இதுபோக, தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தங்களை அள்ளியது, அ.தி.மு.க. முக்கியப் புள்ளிகள்தான். திருச்சியை ஒட்டிய ஒரு மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் பல ஒப்பந்தங்கள் அம்மாவட்ட அ.தி.மு.க. மாஜி அமைச்சரின் கைகளுக்குத்தான் போயின. சொந்தக் கட்சிக்காரர்களை கண்டுகொள்ளவே இல்லை. இப்படி, அமைச்சர்களின் அரவணைப்பில் சம்பாதித்த அ.தி.மு.க.வினர்தான் இந்தத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு செலவழித்துள்ளதற்கான ஆதாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, அ.தி.மு.க.வின் ‘சோத்துப்பாளை’ எனும் அடைமொழி கொண்ட நபர் மத்திய மண்டலத்தில் பல தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு பட்டுவாடாவை நிகழ்த்தியுள்ளார். இதேபோல பல மாவட்டங்களில் அண்டலத்திஅ.தி.மு.கவுடன் தி.மு.க. அமைச்சர்கள் அண்டர் டீலிங் போட்டுக்கொண்டு தங்கள் மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த தி.மு.க. நிர்வாகிகளைத் தேர்தலில் தோற்கடித்து, பழித் தீர்த்திருக்கிறார்கள்.

செந்தில்பாலாஜி நாடகம்!

கோவையை ‘பெரிய கரூர்’ ஆக மாற்றிவிட்டார் செந்தில்பாலாஜி. அவரது கரூர் கம்பெனி, பாரம்பரிய தி.மு.க. நிர்வாகிகளை பந்தாடிய விதத்தில் மூத்த நிர்வாகிகளே நோயாளியாகி படுக்கையில் விழுந்த கொடுமை, தனிரகம். டாஸ்மாக் பார் உள்ளிட்ட வருவாய் வாய்ப்புகளை அவர்கள் கைப்பற்றிவிட்டு தீபாவளி, பொங்கலுக்கு போனஸ்போல் கட்சியினருக்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்தினர். இதனாலேயே கோவை மாவட்டத்தில் கழகத்தின் குடும்பத்தினர் பலர் தி.மு.க.வை புறந்தள்ளிவிட்டு விசிலுக்கு ஓட்டு போட்டனர். கோவை, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் செந்தில்பாலாஜி ஆசிபெற்ற சங்கர் ஆனந்த், சசி ஆனந்த் எனும் இரு நபர்கள் அரசு ஒப்பந்தங்களில் ஆதிக்கம் செலுத்தியது தலைமைக்கே தெரியாமல் மறைக்கப்பட்டது. சங்கர் ஆனந்தை கண்டு, கொங்கு தி.மு.க.வினர் நடுங்கினர். இப்படி கடந்த ஐந்தாண்டுகளும் செந்தில்பாலாஜி ஆடிய நாடகம், மேலிட குடும்பத்தையே மயக்கிவிட்டது.

துரைமுருகன் – பொன்முடி அராஜகம்!

உடல்நிலை இயலாத துரைமுருகனுக்கு கழக பொதுச்செயலாளர் பதவியுடன் அமைச்சர் பதவியும் தந்து தலைமை சீராட்டியபோதும் ஆற்றுப்பாலங்கள், தடுப்பணைகள் கட்டிய விவகாரத்தில் பல நூறு ஸ்வீட் பாக்ஸ்களை ஏப்பம் விட்டிருக்கிறார். ஆனால், உதவிகோரி சென்னைக்கு வந்த சொந்த தொகுதி கட்சியினரையும், வேலூர் மாவட்ட தி.மு.க.வினரையும் விரட்டியடித்த தந்தை மற்றும் மகன் கதிர் ஆனந்தின் கதைகளை எல்லாம், பாதிக்கப்பட்டவர்கள் விலாவாரியாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

செம்மண் முறைகேடு வழக்கில் நீதிமன்றத்திற்கு குடும்பத்தோடு சென்றுவந்த பொன்முடி மற்றும் அவரின் மகன் கௌதம சிகாமணி ஆகியோரால் விழுப்புரம் மாவட்டத்தில் பலன் அடைந்த கட்சிக்காரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உதவிகேட்டு வந்த கட்சிக்காரர்களை இருவரும் விரட்டியடித்த சோகக் கதைகளும், ஆதாயத்தைப் பெற்றுக்கொண்டு பதவிகளை வழங்கியதையும் புகார் மனுக்களாக கள ஆய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

முத்துசாமி – மூர்த்தி துரோகம்!

ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கு ஏன் போனது? மொடக்குறிச்சிதொகுதி கேட்காமலே ம.தி.மு.க.வுக்கு கொடுக்கப் பட்டது ஏன்? கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் வலுவான வேட்பாளர்களுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி சார்பாக டம்மி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது ஏன்? இதுபோன்ற புகார்கள் முத்துசாமி மீது வைக்கப்பட்டிருக்கின்றன.

பணம் பத்திரப்பதிவு, வணிகவரி ना जा கொழிக்கும் இரு துறைகளின் அமைச்சர் மூர்த்தியின் ஆணவப்போக்கு குறித்து மூத்த முன்னோடிகளின் வாரிசுகளே புலம்பியிருப்பது கொஞ்சமாவது தலைமையின் மனசாட்சியை உலுக்கியெடுக்க வேண்டும். ஒன்றியச் செயலாளர்களின் மருமகன், மருமகள் என்ற உறவு முறையில் பணியிட மாறுதலுக்கு மூர்த்தியை அணுகியபோதெல்லாம், ஓராண்டுக்கும் மேலாக சென்னைக்கும், மதுரைக்கும் அலைக்கழித்து, டிரான்ஸ்ஃபரே வேண்டாம் என ஒதுங்கியவர்கள் பகிரங்கமாகவே விஜய்க்கு ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள்!

சக்கரபாணி சதிராட்டம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ.பெரியசாமியை அவமானப்படுத்தவே சக்கரபாணிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்ற பேச்சு உள்ளூரில் விசுவாசமிக்க தொண்டர்களின் மனங்களை காயப்படுத்தியிருக்கிறது. திடீர் பணக்காரன்போல திடீர் அமைச்சரான சக்கரபாணி, பொங்கல் சிறப்பு தொகுப்பில் செய்த ஊழல், உணவுப்பொருட்களை லாரிகளில் ஏற்றிச் செல்ல ஒப்பந்தம் வழங்கியதில் குளறுபடி என ஆடிய சதிராட்டம் குறித்தெல்லாம் ஆய்வுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவரின் சாதி பார்க்கும் போக்கு, மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. விசுவாசிகளை தலைமைக்கு எதிராகவே திரும்பவைத்திருக்கிறது.

இவையெல்லாம்போக, அமைச்சர்களின் பினாமிகளின் குடும்பத்தினர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அடாவடியாக நின்றபோது அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட கழகத்தினர் சிலர்மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. உள்ளாட்சி மற்றும் பத்திரப்பதிவு துறையில் ‘ஃபிக்சேஷன்” முறையில் மிக அதிகளவில் பணம் வசூல் பண்ணியது, ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று வழித்துச் சுருட்டியதெல்லாம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை கிளப்பியது.
இப்படி அதிகார திமிர், பேராசைகொண்ட பத்து அமைச்சர்கள் தி.மு.க. தோல்விக்கு முக்கிய காரணங்களாக இருந்தார்கள் என்பதை அவரவருக்கு நெருக்கமான நிர்வாகிகளே தெரிவித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர, கீதாஜீவன், மெய்யநாதன், கயல்விழி, மனோதங்கராஜ், காந்தி, நாசர் ஆகியோர் அமைச்சர் பதவியை வைத்து வாரிகுவித்தபோதும், கீழ்மட்ட நிர்வாகிகளின் குறைகளைப் போக்க சிறு துரும்பையும் கிள்ளிப்போடவே இல்லை. அவர்களின் நல்லது, கெட்டது நிகழ்வுகளுக்கு உதவவே இல்லை.

தங்கக்காசு – மிட் நைட் மீட்டிங்ஸ்!

கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது பெரிய விமர்சனங்கள் இல்லை. ஆனால் மேலிட கம்பெனி பெயரைச் சொல்லி நடந்த குளறுபடிகள் மிக அதிகம். வாக்குப்பதிவுக்கு இரு வாரங்களுக்கு முன்பு படுவீக்கான 50 தொகுதிகளுக்கு மேலிட கம்பெனி சார்பில் கொடுத்தனுப்பிய ஸ்வீட் பாக்ஸ்கள் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படவே இல்லை. கட்சிக்காரர்களை நம்பாமல் தனது கம்பெனி ஊழியர்களை நம்பிவிட்டார்கள். நடுவில் பஞ்சாயத்து நடந்து சில ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்கள். இது, சொந்தக் காசில் சூனியம் வைத்துகொண்ட கதையாகிவிட்டது.

இதையெல்லாம் மிஞ்சும் விதமாக படு ஷாக்கான குற்றச்சாட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, அறிவாலயத்தைச் சேர்ந்த கலைப்புள்ளி, முண்டாசு கவிஞர் புள்ளி உள்ளிட்ட மூன்று நபர்கள் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களோடும் அமைச்சர்களோடும் நெருங்கிய நட்பில் இருந்துகொண்டு அறிவாலயத்தை தேடி வந்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்த புகார்களை இவர்கள், தலைமையின் கண்களுக்கே காட்டாமல் புதைத்திருக்கிறார்கள். இந்த படுபாதக செயல்களை செய்வதற்காக தங்கக் காசுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

அதை விரும்பாத நேரத்தில் மிட்நைட் மீட்டிங்கிலும் பிஸியாகியிருக்கிறார்கள். தொண்டனின் அவலக்குரல் தடையின்றி தன்னை அடைய வேண்டும் என தலைவர் ஸ்டாலின் யாரை நம்பினாரோ அந்த மும்மூர்த்திகள், செஞ்சோற்றுக்கடனை மறந்தார்கள் என ஒட்டுமொத்த தி.மு.க. செயல்பாடுகளையும் ஸ்கேன் செய்திருக்கிறது இந்த கள ஆய்வுக்குழு அறிக்கை.

இதுபற்றி கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரிடம் கேட்டபோது, “கள ஆய்வுக்குழுவால் தயாரிக்கப்பட்டு, தலைமையின் கவனத்துக்கு தரப்பட்டுள்ள அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்று வெளியில் உள்ளோருக்கு எப்படி தெரியும்? யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்றனர்.

ஆய்வுக்குழுவின் அறிக்கையாவது அறிவாலயத்தின் கண்களை திறக்குமா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *