ரூ.100 கோடி நஷ்டஈடு… India Today, NDTV-க்கு 48 மணிநேரம் கெடு விதித்த உதயநிதி ஸ்டாலின்..! – Kumudam

Spread the love

காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு உரிய முறையில் பெற்றுத்தர வேண்டும் என்பதையும், டெல்டா விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதையும் வலியுறுத்தி தஞ்சாவூரில் கடந்த ஆகஸ்ட் 04 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி நீர் விவகாரம் தொடர்பான தமிழ்நாட்டின் நிலைப்பாடு மற்றும் விவசாயிகளின் பாதிப்புகள் குறித்து பேசினார்.

இந்தப் பேச்சில் இடம்பெற்ற கருத்துகளை சில ஊடகங்கள் தவறான பொருளில் எடுத்துக்கொண்டு செய்தியாக வெளியிட்டதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, என்டிடிவி(NDTV) நிறுவனத்தின் மேலாண்மை ஆசிரியர் சிவ அரூர் மற்றும் இந்தியா டுடே(INDIA TODAY) குழுமத்தின் மூத்த ஆசிரியர் அக்சிதா நந்தகோபால் ஆகியோரின் செய்தி வெளியீடுகள் உதயநிதி ஸ்டாலினின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞரும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான பி. வில்சன் தலைமையிலான சட்ட நிறுவனம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது வெளியீடுகளுக்காக பகிரங்கமாகவும் நிபந்தனையற்ற வகையிலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய செய்திகள், வீடியோக்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. அத்துடன், அவதூறு காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் மன உளைச்சல் மற்றும் நற்பெயர் பாதிப்புக்கு ரூ.100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் சட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ரூ.100 கோடி இழப்பீடு கிடைத்தால், அந்தத் தொகையை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாமல் காவிரி நீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளின் நலனுக்காக வழங்க உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி நீர் கிடைக்காததால் ஏற்பட்ட பயிர் சேதம் மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு இந்தத் தொகை நிவாரணமாக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் உரிய விளக்கத்துடன் பதிலளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதில் அளிக்கத் தவறினால், உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி போராட்டத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அரசியல் ரீதியாகவும் ஊடக ரீதியாகவும் விவாதத்துக்கு உள்ளான நிலையில், தற்போது தேசிய ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *