தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.
சட்டசபையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், பால் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், அதிகரித்து வரும் தீவனம் மற்றும் தொழிலாளர் செலவுகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளைச் சுத்தம் செய்து பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், அதிகரித்து வரும் செலவுகளையும் கருத்தில் கொண்டு அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்குவது நமது அரசின் கடமை” என முதலமைச்சர் விஜய் கூறினார்.
தினமும் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்:
தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 3.16 லட்சத்துக்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனம் மூலம் நாளொன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
4.3 சதவீத கொழுப்பு மற்றும் 8.2 சதவீத இதர சத்துகள் கொண்ட ஒரு லிட்டர் பாலுக்கு இதுவரை ரூ.35 கொள்முதல் விலையாகவும், ரூ.3 அரசு ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டு வந்தது. இதன்படி மொத்த கொள்முதல் விலை ரூ.38 ஆக இருந்தது.
இந்த விலை கடந்த 2022 நவம்பர் 5-ம் தேதி முதல் மாற்றமின்றி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி ரூ.41 கொள்முதல் விலை:
புதிய அறிவிப்பின்படி, கூட்டுறவு சங்கம் வழங்கும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35-ல் இருந்து ரூ.36 ஆக உயர்த்தப்படுகிறது. அதே நேரத்தில் அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.3-ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தப்படுகிறது.
இதன்மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மொத்த கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்கிறது.
இந்த விலை உயர்வின் காரணமாக அரசுக்கு மாதத்திற்கு கூடுதலாக ரூ.30 கோடியும், ஆண்டுக்கு ரூ.360 கோடியும் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த உயர்வு போதுமானது அல்ல”:
இதனிடையே, பால் கொள்முதல் விலை உயர்வை வரவேற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, இந்த உயர்வு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாமக தரப்பில், “பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாத நிலையில், தனியார் நிறுவனங்கள் ஆவின் கொள்முதல் விலையை விட லிட்டருக்கு ரூ.12 வரை கூடுதலாக வழங்குகின்றன. எனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். அந்த அளவுக்கு உயர்த்த முடியாவிட்டாலும் குறைந்தது லிட்டருக்கு ரூ.7 அளவுக்காவது உயர்த்த அரசு முன்வர வேண்டும்” என பாமக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களுக்கான இந்த புதிய கொள்முதல் விலை மற்றும் ஊக்கத்தொகை உயர்வு, தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் 3.16 லட்சத்துக்கும் அதிகமான உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
