கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள அவர், மீண்டும் ஒரு வேலைக்குத் திரும்ப முடிவெடுத்துள்ளார். ஆனால், அந்த முயற்சியிலும் ஒரு மாபெரும் மனத்தடை அவரை பின்னுக்கு இழுக்கிறது. நேர்காணல்களுக்குத் தயாராக வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு முறையும், ஒற்றைக் கேள்வி அவரை முடக்கிப்போடுகிறது.
“தோல்வியடைந்த என்னை எந்த நிறுவனம் வேலைக்கு எடுக்கும்? இந்த ஒரு சிந்தனையே, என்னை அடுத்தகட்டத்திற்குத் தயாராக விடாமல் தடுக்கிறது,” என்று அவர் தவிக்கும் தவிப்பு, பல இளைஞர்களின் குரலாகவே ஒலிக்கிறது.
இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவுக் குரல்கள் குவிந்துவருகின்றன. பலர் தங்களது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, அவருக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றனர். ஒரு பயனர், “நானும் இதேபோன்ற ஒரு நிலையில் இருந்திருக்கிறேன். ஐஐடி-யில் படித்து, அதிக சம்பள வேலையை விட்டு ஸ்டார்ட்அப் தொடங்கினேன். அது தோல்வியில் முடிந்தது. உலகம் முடிந்துவிட்டதுபோலத் தோன்றியது. ஆனால், என்னை நம்புங்கள், எல்லாம் சரியாகிவிடும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதே பெரிய விஷயம். 10-ல் 9 ஸ்டார்ட்அப்கள் தோல்வியடைவது இயல்பு. இதில் உங்கள் தவறு ஏதுமில்லை,” என ஆறுதல் கூறியுள்ளார்.

மற்றொரு பயனர் இன்னும் ஒரு படி மேலே சென்று, ” உங்களால் நீங்கள் நினைக்கும் வேலையைச் செய்ய முடியுமா? முடியும் என்றால், நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கும்,” என்று நடைமுறை யதார்த்தத்தை விளக்கியுள்ளார்.
துணிந்து ரிஸ்க் எடுத்ததே ஒரு பெரிய தகுதி எனப் பலரும் பாராட்டியுள்ளனர். “இரண்டு நிறுவனங்களைத் தொடங்கி, அதைத் தொடர்ந்து நடத்தியதே உங்கள் திறமைக்குச் சான்று. தோல்வி என்பது நீங்கள் கடினமாக உழைக்கவில்லை என்பதற்கான அடையாளம் அல்ல; பலரும் எடுக்கப் பயப்படும் ஒரு முயற்சியை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளம்,” என்ற கருத்துகள், நம்பிக்கை இழந்த அந்த இளைஞருக்கு மட்டுமல்ல, இதேபோன்ற சூழலில் தவிக்கும் பலருக்கும் ஒரு பெரும் உந்துதலாக அமைந்துள்ளது.!