சிவகங்கை பையூர் சாலை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில், அரிசி கடத்தல் மற்றும் சமூகவிரோத செயல்களைத் தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி குடியிருப்போர் சங்கத் தலைவியும் சர்வதேச விளயாட்டு வீராங்கனையுமான சுபஜாவை, பெண் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவரும் சுபஜாவிடம் நாம் விசாரித்தோம்.
“நான் இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி மற்றும் சர்வதேச விளையாட்டு வீராங்கனை. எங்கள் குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளைப் பலர் முறைகேடாக உள்வாடகைக்கு விட்டுள்ளனர். மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து ஆண்களை அழைத்து வந்து தங்க வைத்து, ரேஷன் அரிசியைக் கார்களில் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் தட்டிக் கேட்டால் தொல்லை கொடுக்கிறார்கள். `அதிகாரிகளின் துணையுடன்தான் இந்த ரேஷன் அரசிக் கடத்தல் தொழிலைச் செய்து வருகிறோம். எங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது “என்று அவர்கள் நேரடியாகவே மிரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் போட்டோ ஆதாரங்களுடன் நேரில் புகார் மனு அளித்தேன். ஆனால், கலெக்டர் ஆபீஸில் உள்ள சில அதிகாரிகள் அந்த ரகசியத் தகவலை எதிர்த்தரப்புக்குக் கசியவிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த, தற்காலிக இரவு நேரக் காவலாளியாக வேலை பார்க்கும் மலர்விழி என்பவர் என்னை நேரில் சந்தித்துச் செருப்பாலும் கையாலும் கடுமையாகத் தாக்கினார்.