லாரான்ஸ் கேங் அச்சுறுத்தல்; கமாண்டோ உதவியுடன் பலப்படுத்தப்பட்ட அமிதாப், சல்மான் பாதுகாப்பு!

Spread the love

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது சமீபத்தில் மும்பையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். ஆனால் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது. அதோடு துஷார் கபூர், ஆயுஷ்மான் குரானா போன்ற நடிகர்களுக்கு பணம் கேட்டு மிரட்டல் அழைப்புகளும் வந்தன. இந்தக் கொலை மிரட்டல்களை குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் செய்கின்றனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்தியவர்களும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். இதனால் போலீஸார் பாலிவுட் பிரபலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்துள்ளனர். அமிதாப் பச்சன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைக் குறிவைக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மும்பை மற்றும் டெல்லியில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆமீர் கான், சல்மான் கான்

இதையடுத்து அந்த கும்பலின் இலக்கில் உள்ள பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மறுஆய்வு செய்யும் நடவடிக்கையில் மும்பை போலீஸார் இறங்கியுள்ளனர்.

இந்தக் கும்பலின் இலக்குகளில் கடந்த மாதம் தாக்குதலுக்கு உள்ளான நடிகர் டைகர் ஷெராபும் அடங்குவார். மேலும், சல்மான் கான், அமீர் கான், ரன்வீர் சிங், கபில் சர்மா மற்றும் குரு ரந்தாவா போன்ற நட்சத்திரங்களுக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோருக்கு ஏற்கனவே ‘Y’ மற்றும் ‘Y-பிளஸ்’ (Y+) வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், இவர்களுக்கு கூடுதலாக 2 முதல் 4 கமாண்டோக்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுடன் ஆயுதமேந்திய போலீஸார் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து, இவர்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் மீதான பிடி இறுகத் தொடங்கியுள்ளது. அகமதாபாத்தின் சபர்மதி மத்திய சிறையில் அவனைச் சந்திக்க வந்தவர்களின் பட்டியலை கொடுக்கும்படி மும்பை மற்றும் டெல்லி போலீஸார் கேட்டுள்ளனர்.

பிஷ்னோயின் வருகையாளர் பதிவேடுகளை ஆய்வு செய்த போது, அடையாளம் வெளியிடப்படாத நபர் ஒருவரை, பிஷ்னோயின் சட்டக் குழுவைச் சேர்ந்தவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவருமான தீபக் கத்ரி என்பவர் மிரட்டி பணம் பறிப்பது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண சபர்மதி சிறைக்கு லாரன்ஸ் பிஷ்னோயிடம் அழைத்துச் சென்றது தெரிய வந்துள்ளது. சிறையில் இருந்தபடியே தனது கும்பலுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதை ஒழிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடுமையான சிறைக்கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், உளவுத்துறை மற்றும் காவல் துறையினர், நேரில் வரும் பார்வையாளர்களையும், சர்வதேசத் தகவல் பரிமாற்ற வழிகளையும் பயன்படுத்தி, லாரன்ஸ் பிஷ்னோய் தனது “நிழல் அமைச்சரவை”க்கு உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருப்பதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர். எனவே லாரன்ஸ் பிஷ்னோயை சந்தித்த உறவினர்கள், சட்டப் பிரதிநிதிகள் மற்றும் அறிமுகமானவர்கள் என அனைவரையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் லாரன்ஸ் பிஷ்னோயின் அடிமட்டக் கட்டளைச் சங்கிலியைத் துண்டிப்பதும், சிறைச்சாலை வழியிலான தகவல் தொடர்புத் தடங்களைக் கட்டுப்படுத்துவதுமே ஆகும். உட்படுத்துவதுமே ஆகும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதோடு லாரன்ஸ் பிஷ்னோயை யாரும் அணுக முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு மிக்க இடத்திற்கு இப்போது சிறை நிர்வாகம் மாற்றி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *