தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, படிப்படியாக வலுவடைந்து புயலாக வரும் 16ஆம் மாலை மாறும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் நிலவிய மேல் வளிமண்டல புயல் சுழற்சியின் தாக்கத்தால், இந்திய நேரப்படி காலை 05.30 மணிக்கு தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி, நவம்பர் 13, 2026, இந்திய நேரப்படி காலை 08.30 மணி வரையிலும் அதே பகுதியில் நிலை கொண்டிருந்தது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தப் பகுதியாக மாறி, நவம்பர் 15, 2026 காலை வாக்கில் அதே பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அதன் பிறகு, இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16 ஆம் தேதி மாலை வாக்கில் மத்திய வங்காள விரிகுடாவில் மேலும் வலுப்பெற்று ஒரு புயலாக மாற வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவ.16ம் தேதி புயலாக வலுப்பெறும் பட்சத்தில் ஈரான் நாடு பரிந்துரைத்துள்ள “அக்வான்’ என்ற பெயர் வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்வான் என்றால், அசுரன் அல்லது அரக்கன் என்பது பொருள்.