வண்ணாங்கோவில்: ஆபத்தான முறையில் காத்திருக்கும் மாணவர்கள் – பேருந்து நிறுத்தம் எப்போது அமைக்கப்படும்?

Spread the love

திருச்சி–திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள வண்ணாங்கோவில் பகுதியில் தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கல்வி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இத்தனை ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக பேருந்தில் ஏறி, இறங்குவதற்கான முறையான பேருந்து நிறுத்தம் இருபுறங்களிலும் இல்லாதது தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி, அப்பகுதி பொதுமக்களும் தினசரி பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பைபாஸ் சாலையின் இருபுறங்களிலும் பேருந்து நிறுத்தம் இல்லாததால், பேருந்துக்காக சாலையோரத்திலேயே காத்திருந்து, பேருந்து வந்தவுடன் சாலையிலேயே நின்று ஏறி இறங்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக பள்ளி மாணவர்களின் நிலை இன்னும் சிரமமாக உள்ளது. பேருந்துக்காக காத்திருக்கும் நேரங்களில் போதிய இடவசதி இல்லாததால், சில நேரங்களில் பள்ளி மாணவர்கள் சாலையோரத்திலேயே உட்கார்ந்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பேருந்து வந்தவுடன் அவசரமாக எழுந்து சாலைக்குச் சென்று பேருந்தில் ஏறிச் செல்லும் நிலையும் காணப்படுகிறது.

அதிக வாகனங்கள் செல்லும் பிரதான பைபாஸ் சாலையில் சிறுவர்கள் இவ்வாறு சாலையோரத்தில் காத்திருப்பதும், பேருந்து வரும்போது சாலைக்குச் சென்று ஏறுவதும் பெற்றோர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், மழைக்காலம் தொடங்கும் நிலையில் இந்தச் சிரமம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மழையில் நனையாமல் காத்திருக்க நிழற்குடை மற்றும் பாதுகாப்பான காத்திருப்பு இடம் இல்லாததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருச்சி–திண்டுக்கல் பைபாஸ் சாலையில் வண்ணாங்கோவில் அருகே சாலையின் இருபுறங்களிலும் முறையான பேருந்து நிறுத்தம், நிழற்குடை மற்றும் பாதுகாப்பான பயணிகள் காத்திருப்பு பகுதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த அடிப்படைத் தேவைக்கு, 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தீர்வு கிடைக்குமா என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *