சிலருக்கு தீவிர நோய்கள் இருக்கலாம். உதாரணத்துக்கு மனநல பாதிப்புகளுக்காக ஆன்டி டிப்ரெசன்ட் மருந்துகள் எடுத்துக்கொள்பவராக இருக்கலாம். அந்த மருந்துகளின் விளைவாலும் உறவில் நாட்டம் குறையலாம். உயர் ரத்த அழுத்தத்துக்குப் பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளின் விளைவாலும் தாம்பத்ய உறவில் நாட்டம் குறையும். அப்படி இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை நிறுத்தாமல் வேறு மருந்துகளை மாற்றி வாங்கி உபயோகிக்கலாம். கீமோதெரபி, கருத்தடை மாத்திரைகளும் காரணமாகலாம்.
கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டுவது போன்றவற்றால் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் காரணமாகலாம். மெனோபாஸ் காலகட்டம் அல்லது பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தாலும் ஹார்மோன் அளவுகள் மிகக் குறைவாக இருப்பதன் காரணமாக தாம்பத்ய உறவில் ஈடுபாடின்மை ஏற்படும்.

எனவே. இவற்றில் எந்தக் காரணத்தால் உங்களுக்கு உறவில் நாட்டமில்லை என்று தெரிந்தால்தான் அதற்கேற்ற சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள்தான் காரணம் என்றால் அவற்றை மாற்றி எடுத்துக்கொள்வதன் மூலம் இதற்குத் தீர்வு கிடைக்கும். உறவுச்சிக்கல்கள், ஸ்ட்ரெஸ் போன்றவற்றுக்கு கவுன்சலிங் மூலம் தீர்வு காணலாம். ஆல்கஹால், சிகரெட் பழக்கங்கள் இருந்தால் தவிர்க்க வேண்டும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதும் இந்த விஷயத்தில் மிகவும் அவசியம். ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி போன்றவையும் தாம்பத்ய உறவில் நாட்டத்தை அதிகரிக்கும்.
சிலருக்கு சிகிச்சை தேவைப்படலாம். உதாரணத்துக்கு மெனோபாஸ் காலத்தில் இருப்போருக்கு ஹார்மோன் தெரபி தேவைப்படலாம். ஆனால் அதை எல்லோருக்கும் பரிந்துரைக்க முடியாது. மருத்துவ ஆலோசனையின் பேரில் தேவைப்படுவோருக்கு தேவைப்படும் அளவு மட்டுமே கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் குறைவாக உள்ளவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஜெல், ஸ்பிரே, பேட்ச்சஸ், டெஸ்ட்டோஸ்டீரான் பேட்ச்சஸ் போன்றவற்றைப் பரிந்துரைப்பார்கள். முதலில் உங்கள் விஷயத்தில் இதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறியுங்கள். அதன்பிறகு மருத்துவ ஆலோசனையோடு தகுந்த சிகிச்சையைப் பின்பற்றுங்கள். நம்பிக்கையோடு இருங்கள்.
டாக்டர் ஸ்ரீதேவி:
கோவை, கிணத்துக்கடவில் S V Medical Center-ன் உரிமையாளர். இத்துறையில் 19 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.