`வருகிற மொத்த பணத்தையும் செலவு பண்ணிட மாட்டாங்க' – அந்தக் கால 'சத்திரங்களின்' நிதிக் கணக்கு!

Spread the love

சத்திரம் – இந்த வார்த்தையை நாம் அதிகமாகக் கேள்விப்பட்டிருப்போம். வகுப்பறையில் ஆசிரியர், “இது ஒன்றும் சத்திரம் கிடையாது?” என்பார், மக்கள் பேச்சு வழக்கில் சத்திரம் என்ற வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்துவதையும் பார்த்திருப்போம்.

ஒரு காலத்தில் சத்திரங்கள் மக்கள் ஓர் இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்குச் செல்லும் போது வழியில் ஓய்விற்காக  தங்கியிருந்து உணவருந்தி, மீண்டும் தனது பயணத்தை தொடங்கப் பயன்பட்டன.  

இப்படி சத்திரங்கள் அன்றைய காலத்து மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகின்ற பொது இடமாகப் பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று காலத்திற்கேற்ப சத்திரங்கள் குறைந்து, விடுதிகளும், உணவகங்களும் உருவானதில் எந்த வியப்புமில்லை.

அன்று சத்திரங்கள் ‘தருமக்கட்டளை’ என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்தது. இவை ஊர்கள்தோறும் அமைக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் தஞ்சை ராஜகோபாலசுவாமி தெருவில் உள்ள கிட்டப்பா வட்டாரத்தில் பாதை ஓரத்தில் பிற்கால கல்வெட்டு ஒன்று  கிடப்பதை அஞ்சல் துறைப் பணியாளர் சு.சரவணன் பார்வையிட்டு, மணி. மாறனிடம் தெரிவித்தார்.

இதனை ஆய்வு செய்த சரசுவதி மஹால் நூலகத் தமிழ் பண்டிதர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் மணி.மாறனிடம் இது பற்றி பேசினோம். சுவாரஸ்யமான தகவல்களை நமக்கு அவர் அள்ளித் தந்தார்.

“அன்றைய காலத்தில் ஊர்கள் தோறும் சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தது. வழிப்போக்கர்கள் தங்களது சோர்வை போக்கிக் கொள்ளவும், பசியாற்றிக் கொள்ளவும் சத்திரங்கள் அன்று பயன்பாட்டில் இருந்தது.

பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் கூட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு சத்திரங்களும், அறக்கட்டளைகளும்  பயன்படுத்தப்பட்டன.

இவை ‘தருமக்கட்டளை’ என்ற பெயரால் பல இடங்களில்,  நிலமும், பொருளும் நிரந்தரமாக வழங்கப்பெற்று நற்காரியங்கள் புரிவதற்குப் பயன்பட்டது , இத்தகைய  கொடை யாரோ ஒருவருக்கோ அல்லது சிலருக்கோ  வழங்கப்பட்டிருந்தது.”

கல்வெட்டு
கல்வெட்டு

வசிக்க,  அறக்கட்டளையை செயல்படுத்த இத்தனை தகுதிகளா…!

“கிபி 1885 ஆம் ஆண்டு ஆவணம் ஒன்று சத்திரங்கள் பற்றிய வியப்பான தகவல்களைத் தருகிறது. அதில் சொல்லப்பட்டிருப்பது சத்திரத்திற்கு வருகின்ற வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் சேமித்து வைக்கப்பட வேண்டும் என்றும், எதிர்கால நெருக்கடிகளைச் சமாளிக்க அது பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வழிப்போக்கர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் இவர்களுக்கெல்லாம் சத்திரங்களில் உணவு வழங்க வேண்டும் என்றும், சோம்பேறிகளுக்கு இங்கே தங்கவும், உணவளிக்கவும் கூடாது என்றும் குறிப்பிட்டு இருக்கிறது” என்று மணி.மாறன் கூறுகையில் வியப்பு மேலிட்டது.

கிட்டப்பா வட்டாரத்திலுள்ள கல்வெட்டு செய்தி:

“சுமார் ஒண்ணேகால் அடி அகலமும் இரண்டரை அடி உயரமும் கொண்ட கிட்டப்பா வட்டாரத்தில் உள்ள கல்வெட்டில் 30 வரிகள் தருமக்கட்டளை பற்றிக் கூறியுள்ளது.

கிபி 1889ஆம் ஆண்டு ஜனவரி 17 தமிழ் சர்வதாரி ஆண்டு தை மாதம் 6 எனக் குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டில் கிபி 1887ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 1 தஞ்சாவூர் கோட்டைக்குள் உள்ள ராஜகோபால சுவாமி வீதியில் அண்ணு பாட்டகர் சொல்படி நாகோ பாட்டகர் செய்த தரும செயலை, அவருடைய தமையன் வெங்கோ பாட்டகர் எழுதி வைத்த உயில் என்று குறிப்பிடுகிறது.

தமிழ் கல்வெட்டு
தமிழ் கல்வெட்டு

மேலும் அக்கல்வெட்டில் துவாதசி கட்டளை நடத்தப்படுவதற்கு அவருடைய வீட்டின் மேல் புறமும், ரூபாய் 400 வைப்பு நிதியாகவும் வைக்கப்பெற்று , அதில் கிடைக்கக்கூடிய வட்டித் தொகையினைக் கொண்டு 10 பிராமணருக்கு அவரும், அவருடைய தமக்கை காமாட்சி அம்மாளும் அன்னம் வழங்கியிருந்த குறிப்பு காணப்படுகிறது.

இவர்களுக்குப் பிறகு இந்த தருமத்தை தமக்கை மகள் கங்கா பாய் அம்மாள் நடத்த வேண்டும் என்றும், இதனை அனைவரும் அறியும் படியாக கல்வெட்டில் வெட்டுவித்ததையும் குறிப்பிடுகிறது.”

“மேலும் கொடை அளித்தவர்களின் பெயர்களைக் காணும்போது அவர்கள்  மராட்டியர் வழி வந்தவர்கள்  என்பதை நம்மால் அறிய முடிகிறது. இந்த ஆய்வின் போது எனக்கு உதவியாக முனைவர் கோ. தில்லை கோவிந்தராஜன் மற்றும் கோ. ஜெயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்” என்றார்.

இனி அந்தக் காலத்துச் சத்திரங்கள் பற்றி பேசும்போது, சத்திரங்களுக்குள் தங்குவதற்கும், தருமம் செய்வதற்கும் உள்ள தகுதிகள் தானே நினைவு வரும்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *