வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துவது ஏன்? தப்பிப்பது, தவிர்ப்பது எப்படி? – நிபுணர் ஆலோசனை!

Spread the love

புதிய‌ இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்றாலே பலருக்கும் ஒரு பயம் வருகிறது. அதுவும் இரவு நேரம் என்றால் சொல்லவே வேண்டாம்!

இப்பயத்திற்கான முக்கிய காரணம், தெருக்களில் வசிக்கும் நாய்களின் குரைத்தலும் துரத்திவரும் தன்மையும்தான் என்று, பல வாகன ஓட்டிகள் ‌கூறுகின்றனர்.

வெறி நாய் கடியால் உயிர் போகும் சம்பவங்களும் ஆங்காங்கே அச்சமூட்டுகின்றன. நாய்கள் இவ்வாறு நடந்துகொள்வது ஏன், அவற்றின் தன்மை என்ன… அத்தகைய சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன், செல்லப்பிராணிகள் வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்ற, இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் சாய் கிரணை தொடர்பு கொண்டு முன்வைத்தோம்.

கடந்த 10 வருடங்களாகச் சென்னையில் நோய்களுக்கான பிரத்யேக, `Pet Taxi’ சேவையை நடத்தி வரும் அவர், நம்மிடம் விரிவாகப் பேசினார்.

சாய்கிரன்

`நாய்கள் வாகனங்களை துரத்துவதற்கான காரணங்கள் என்னென்ன?’

“நாய்கள் ஓநாய் இனத்தின் வழித்தோன்றலாகும். அதனால்தான், நாய்களுக்குள்ளும் வேட்டையாடும் தன்மை இருந்து வருகிறது. அதைத் தூண்டும் விதமாக ஏதேனும் நடக்கும்போது, அதன் குணங்கள் வெளிப்படுகின்றன.

நாய்கள் எப்போதுமே தனக்கென ஓர் எல்லையை நிர்ணயித்து வைத்திருக்கும். அதில், புதிய நபர்களோ, வேறு சில பிராணிகளோ வந்தால், அவற்றால் எளிதாகக் கண்டறிந்து கொள்ளமுடியும். அவர்கள் ‌மூலம் தனக்கோ, தன்னுடைய ‌சுற்றுச்சூழலுக்கோ பிரச்னை வந்துவிடும் என்ற பயத்தில் தற்காப்புக்காகத்தான் இப்படிப்பட்ட‌ செயல்களைச் செய்கின்றன.

நாய்களின் இப்படிப்பட்ட திறனே அவை வீட்டுப்பிராணியாக வளர்க்கவும் ஒரு காரணமாக உள்ளது.

கூட்டமாக நாய்கள் வசித்து வருகிற தெருவில், ஒரு புதிய வாகன ஓட்டி வந்துவுடன், ஒரு நாய் குரைத்தால்போதும்! மீதமுள்ள அனைத்து நாய்களும் எச்சரிக்கையாகிவிடும். அதைத்தான் “Pack Instance” என்று சொல்வார்கள்.

அப்படிப்பட்ட ‌சூழலில் பதற்றமடைவதைத் தவிர்த்தல் அவசியம்.

நாய்களை பொறுத்தவரை, வாகனங்களை வேறு ஏதோ ஒரு பிராணி என்றுதான் நினைத்துக்கொள்ளும். ஆகையால், நீங்கள் வாகனத்தை இன்னும் ‌விரைவுப்படுத்தினால், தனக்கு ஆபத்து ஏற்படும் ‌என்ற பயத்தில் அவை உங்களைத் தாக்க நேரிடும்.

மேலும், அதிகமான மற்றும் வித்தியாசமான “ஹாரன்” ஒலி, கால்களை தரையில் ‌தேய்த்துகொண்டே ஓட்டுவது, சாகசங்கள் செய்வது, பயத்தில் நாய்களை தாக்க முயற்சிப்பது போன்றவை நாய்களுக்கு மேலும் எரிச்சலூட்டி கோபமடையச் செய்யும்.

குறிப்பாக குட்டிகளை ஈன்றிருக்கும் பெண் நாய்கள், தன் குட்டிகளை காப்பாற்றிக் கொள்ள இது போன்ற செயல்களில் ஈடுபடும்.

இதனால், நாய்கள் துரத்துவதற்கும் கடிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.”

`இப்படிப்பட்ட சூழலை சமாளித்து தப்பிச் செல்வது எப்படி?’

“இந்தச் சூழலில் வாகனங்களை மெதுவாக ஓட்டவோ அல்லது நிறுத்துவிடுவதோ தான் நல்லது. பயத்தை வெளிக்காட்டாமல் இருத்தல் அவசியம்.

அப்போது, நாய்கள் உங்கள் அருகில் வந்து மோப்பம் பிடித்துப் பார்த்துவிட்டு, உங்களால் ‌அதற்கு எந்த தீமையும் நிகழாது என்று உறுதி செய்துவுடன் அமைதியாகிவிடும்.

ஆனால், தொடர்ந்து இது போன்ற ‌சிக்கல் வராமல் இருக்க, அந்த நாய்களுக்கு ஏதேனும் உணவளித்துகூட‌ பரிச்சயமாக்க முயற்சி செய்யலாம்.

ஒரு தெருவில் உள்ள, நாய்களுக்கோ அல்லது அந்த நாய்களால் பிற உயிர்களுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு உணவளிப்பவர்கள் நிச்சயமாக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். உணவளிப்பதைப்போல் இதுவும் அவசியமான பொறுப்புதான்‌” என்றார், விரிவாக.

இது பற்றி வேலூர் மாவட்டம், கல்லப்பாடி அரசு கால்நடை மருந்தகத்தில் உதவி மருத்துவராகப் பணியாற்றி வரும் இரம்யா (பி.வி.எஸ்.சி & ஏ.எச்) நம்மிடம் பேசுகையில்,

“நாய்கள் வாகனங்களை துரத்துவதற்கான முக்கிய காரணம், அதன் சக்கரங்களில் வேறு ஏதோ பகுதி நாயின் சிறுநீர் எச்சம் உள்ளதால்தான்.

பொதுவாக தெருக்களில் உள்ள 90% நாய்கள் பாதுகாப்பானவை தான். ஆனால், மீதமுள்ள நாய்கள் வெறிப்பிடித்தோ, ரேபிஸ் தொற்று ஆட்கொண்டோ இருக்கக்கூடும்.

அவற்றிடம், நாம் கவனமாக இருப்பது அவசியம்.

பெரும்பாலும் வாகனத்தை நிறுத்துவதுதான் ‌சிறந்தது. ஆனால், ரேபிஸ் வைரஸ் ஆட்கொண்ட நாய்களாக இருப்பின் அவை உடனே தாக்க முயற்சிக்கும்.”

இரம்யா

“நாய்கள் வாகனங்களின் நிறங்களை பொருத்து கோபமடையுமா?”

“நிறங்கள் நாய்களை தூண்டும் காரணியில்லை, நாய்களால் மஞ்சள் மற்றும் நீல நிறங்களை மட்டுமே பார்க்க முடியும்.”

“ரேபிஸ் வைரஸ் ஆட்கொண்ட நாய்களை கண்டறிமுடியுமா?”

“மருத்துவ ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். மேலும், அதன் சில நடவடிக்கைகளை கவனித்தும் சற்று எச்சரிக்கையாகலாம்.

பெரும்பாலும் ரேபிஸ் தொற்று ஆட்கொண்ட நாய்கள் தனியாகவும், ஆக்ரோஷமாகவும், தொடர்ந்து குரைத்துக்கொண்டும், மற்ற விலங்குகளை, மனிதர்களை தாக்கிக் கொண்டும் இருக்கும்.

நாக்கினை பெரும்பாலும் வெளியில் தொங்க விட்டு, மூச்சிரைத்தப்படியே, உமிழ்நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கும்.

ரேபிஸ் வைரஸ் ஆட்கொண்ட நாய் மட்டுமில்லாமல் அனைத்து நாய்களுக்குள்ளும் ஏதேனும் வைரஸ் இருக்கக்கூடும்.

ஆகையால், ரேபிஸ் வந்த நாயோ அல்லது வீட்டில் வளர்க்கும் ‌நாயோ… எது கடித்தாலும் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் ‌சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

அதற்கு முன்பு, நாய் கடித்தவுடன் வேகமாக வரும் ‌தண்ணீரை பாய்ச்சி ஏதேனும் ஒரு சோப்பு கொண்டு குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் நன்றாக கழுவுதல் வேண்டும். அப்போதுதான் அந்த வைரஸ், உடலுக்குள் புகுவது தடுக்கப்படும்.

மஞ்சள் வைத்தல், எருக்கம் பால் விடுதல், நாய் கடித்த இடத்தை செருப்பு கொண்டு அடித்தல் போன்றவை நம் நாட்டில் பின்பற்றப்படுகின்றன.

ஆனால், இவை அறிவியல் மூலம் நிரூபிக்கப்படவில்லை ! மேலும், இவை காயப்பட்ட இடத்தை மூடி, வைரஸ் வெளியே வராமல் உட்புகுந்து பரவ வழிவகுக்கக்கூடும்.

மேலும், மருத்துவர் பரிந்துரைக்கும் கால இடைவெளியில் நிச்சயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஊசி போடாவிட்டால் அதன் விளைவு தற்போது இல்லையென்றாலும், பிற்காலத்தில் பிரச்னைகளை உண்டாக்கக் கூடும்.

ஏதேனும் நாய்கள் வாகனங்களை தொடர்ந்து துரத்தி, பல்வேறு முறை சேதங்களை ஏற்படுத்துகின்றன என்றால், உடனடியாக ‌சுகாதாரத்துறைக்கு தகவல் அளித்து, அவற்றை தனிமைப்படுத்தி, ரேபிஸ் தொற்று உள்ளதா என்று அறிவது அவசியம்” என்று மருத்துவர் இரம்யா பகிர்ந்து கொள்கிறார்.

வாகனங்களில் போகும்போது இனி நாய்கள் துரத்தினால், பதற்றமடையாமல், நிதானமாக மேலே கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவோம்.

பாதுகாப்பான முறையில் ‌பயணங்களை மேற்கொள்வோம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *