வாக்கு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லு திமுகவிடம் எச்சரிக்கை இருங்க  – அதிமுகவினருக்கு எடப்பாடி அட்வைஸ் – Kumudam

Spread the love

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள தி.மு.க.வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்ப தற்குத் தயாராக உள்ளனர்.

அ.தி.மு.க. முகவர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில், பின்வரும் முக்கிய அம்சங்களை நினைவில் கொண்டு பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.வாக்கு எண்ணிக்கையின்போது சிலமுக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.அ.தி.மு.க. முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்ல வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் காலதாமதமாக செல்லக்கூடாது.

வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் மேஜைகளுக்கு ஏற்றார் போல் முகவர்களை நாம் நியமித்திருக்கிறோம். அந்த முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற நாற்காலிகளுக்குச் சென்று அமர்ந்துவிட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே சென்றவர்கள், வாக்கு எண்ணிக்கை முடிவுற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற வரையிலும், எக்காரணத்தைக் கொண்டும் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து வெளியே வரக்கூடாது. மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும், நீங்கள் குறித்து வைத்திருக்கின்ற வாக்குகள், தேர்தல் நடத்தும் அலுவலரால் சரியாக அறிவிக்கப்படுகிறதா என்பதை கவனமுடன் பார்க்க வேண்டும்.தி.மு.க.வினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு, கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க.வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து, முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.

கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் நியமிக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில், அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியே வரவேண்டும்.இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.கோடான கோடி மக்களின் பேராதரவோடு, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக்கனியை `பொன் மனச் செம்மல்’ புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்.

தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி தி.மு.க. மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இதுதான், தன் நலன் பாராமல் நமக்காக உழைத்த, நாட்டுக்காக உழைத்த, புரட்சித் தலைவருக்கும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *