வானதியை கழட்டிவிட்ட பாஜக? பாஜகவில் நடந்த அதிரடி மாற்றங்கள்..!  – Kumudam

Spread the love

அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு அம்மாநிலத்தின் கட்சி பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேசிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வசுந்தரா ராஜே சிந்தியா, ராம் மாதவ், பைஜயந்த் பாண்டா, டி. புரந்தேஸ்வரி, ரேகா வர்மா, பார்தி பிரவின் பவார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக பி.எல். சந்தோஷ் தொடர்ந்து நீடிக்கிறார். வினோத் தாவ்டே மற்றும் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தேசிய பொதுச் செயலாளர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, பாஜகவின் சமூக ஊடகப் பிரிவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாக அந்தப் பொறுப்பில் இருந்த அமித் மால்வியாவுக்கு பதிலாக தீபக் மஸ்கே நியமிக்கப்பட்டுள்ளார். ஊடக ஒருங்கிணைப்பாளராக அனில் பலூனி தொடர்கிறார்.

மேலும், பிரீத்தி காந்தி, சிவானந்த் திவேதி, அலோக் பட் மற்றும் அருண் யாதவ் ஆகியோர் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவின் தலைமைப் பொறுப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு பதிலாக ஹேமங் ஜோஷி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், மகளிர் அணிக்கு சத்தீஸ்கரின் ரூப் குமாரி சௌத்ரி மற்றும் சிறுபான்மையினர் அணிக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குன்வர் பாசித் அலி ஆகியோர் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் புதிய தேசிய நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் அமைப்பு ரீதியான பொறுப்புகளில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசனுக்கு தேசிய அளவில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது கவனம் பெற்றுள்ளது. புதிய நிர்வாகிகள் பட்டியலில் வானதி சீனிவாசன் இடம்பெறாத நிலையில், இது அவருக்கான பதவி மாற்றமா அல்லது கட்சியின் அடுத்தகட்ட தமிழக அரசியல் திட்டத்தில் வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *