Last Updated : 23 Jan, 2025 05:08 PM
Published : 23 Jan 2025 05:08 PM
Last Updated : 23 Jan 2025 05:08 PM
ஜோசப் பிரபாகர்
ஜனவரி கடைசி வாரத்திலிருந்து பிப்ரவரி சில வாரங்கள்வரை வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய ஆறு கோள்களும் இரவு வானில் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் அழகான வானவியல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆறு கோள்களில் வெள்ளி, செவ்வாய், சனி ஆகிய நான்கு கோள்களை வெறும் கண்களால் பார்க்க இயலும். மற்ற இரண்டு கோள்களையும் திறன் வாய்ந்த தொலைநோக்கிகள் மூலமே காணமுடியும். உலகமெங்கும் இருக்கும் அறிவியல் ஆர்வலர்கள், வானவியல் செயல்பாட்டாளர்கள் இந்த வானவியல் நிகழ்வைக் கொண்டாட நிறைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
இரவு வானத்தில் இந்த ஆறு கோள்களில் ஏதாவது ஓரிரண்டு கோள்கள் எப்போதும் தெரிந்து கொண்டிருக்கும். ஆனால் கொஞ்சம் அரிதாக சில வருடங்களுக்கு ஒரு முறைதான் கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அதுவும் இரவு நேரத்தில் வரும். இப்படி ஒரு அரிய வானியல் நிகழ்வை நாம் குழந்தைகளோடு கண்டுகளிக்க வேண்டும். சூரியன் மறைந்த பிறகு முக்கால் மணி நேரம் கழித்து இக்கோள்கள் நன்றாக தெரிய ஆரம்பிக்கும். இரவு ஒன்பது மணி வரை கண்டு களிக்கலாம். அதன்பிறகு ஒவ்வொரு கோளாக மேற்கு வானத்தில் மறைய ஆரம்பித்து விடும்.
எந்தக் கோள்கள் எங்கே தெரியும்?
கிழக்கு வானத்தில் செவ்வாய் கோள் வெளிறிய சிவப்பு நிறத்தில் தெரியும். உச்சி வானில் வியாழன் தெரியும். மேற்கு வானத்தில் வெள்ளிக்கோள் நல்ல பிரகாசமாகவும், அதற்கு அருகில் சனிக்கோள் மங்கிய சிவப்பு நிறத்தில் தெரியும். நெப்டியூன் வெள்ளிக்கோளுக்கு கொஞ்சம் மேலே இருக்கும். யுரேனஸ் வியாழன் கோளுக்கு அருகில் இருக்கும். இந்த இரண்டு கோளையும் தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க இயலும்.
என்ன சிறப்பு?
தொலைநோக்கி அல்லது இரு குழல் தொலைநோக்கி(பைனாகுலர்) இருந்தால் இக்கோள்களின் சில சுவாரசியமான விஷயங்களைக்காணலாம். வியாழன் கோளை தொலைநோக்கிமூலம் பார்த்தால் அதன் நான்கு நிலாக்களை காணமுடியும். கலீலியோ முதன்முதலில் இதைக்கண்டறிந்ததால் இவை “கலிலியோ நிலாக்கள்” என்றழைக்கப்படுகிறது. பூமிக்கு மட்டும்தான் நிலா இருக்கும் என்கிற நம்பிக்கை இருந்த காலத்தில் கலிலீயோ வியாழனுக்கும் நிலாக்கள் உண்டு என்று இதன் மூலம் நிரூபித்தார். வெள்ளிக்கோளை தொலைநோக்கி மூலம் பார்த்தால் அதன் பிறைவடிவம் தெரியும். நிலாவுக்கு பிறைகள் இருப்பது போல் பூமியில் இருந்து பார்க்கும்போது வெள்ளிக்கோளுக்கும் பிறைகள் உண்டு என்பதை கலிலீயோ முதன் முதலில் கண்டறிந்தார். இதன் மூலம் கோபர்நிகஸின் சூரிய மையக்கோட்பாட்டை நிரூபித்தார். அதேபோல் சனிக்கோளை தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது அதன் அழகான வளையங்கள் தெரியும். இதற்கு பின்னாலும் நிறைய வானவியல் வரலாறு உண்டு. செவ்வாய்க்கோளின் இயக்கத்தை கெப்ளர் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ஆராய்ந்து கோள்கள் அனைத்தும் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன என்று நிறுவினார். இப்படி உலகை மாற்றிய தலைசிறந்த அறிவியல் சிந்தனைகளைப்பற்றி நாம் குழந்தைகளோடு உரையாட முடியும்.
இந்தக்கோள்களின் அணிவகுப்பைப்பற்றி அறிவியலுக்கு புறம்பான சில செய்திகளும் சமூக ஊடகங்களில் உலா வருகிறது. கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் என்று கூறும்போது இக்கோள்கள் ஒன்றுக்கொன்று அருகருகே வருகிறது என்று நினைக்கக்கூடாது. ஒவ்வொரு கோளும் அதனதன் தொலைவில்தான் இருக்கின்றன. பூமியிலிருந்து பார்க்கும்போது அருகருகே இருப்பது போல் நமக்கு தெரிகிறது. அதே போல் இந்த நிகழ்வினால் எந்த இயற்கை சீற்றங்களோ, உடல்நலப்பிரச்சினைகளோ ஏற்படாது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திரளாக இந்த அழகான வானவியல் நிகழ்வைக் கண்டுகளிக்கலாம்.
கட்டுரையாளர், இயற்பியல் விரிவுரையாளர்.
தொடர்புக்கு: josephprabagar@gmail.com
FOLLOW US