International
oi-Vigneshkumar
சனா: சவுதி அரேபியா- ஏமன் எல்லையில் உள்ள அல்-வடியா எல்லை அருகே, ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற சவுதி அரேபியா வாகனங்கள் மீது ஏமனின் ஹவுதி படைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.. இந்த தாக்குதலில் ராணுவ உபகரணங்கள் ஏற்றி சென்ற வாகனங்கள் தீப்பற்றி எரிந்து நாசமானது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு அமெரிக்கா ஈரான் இடையே பல மாதங்களாக மோதல் தொடரும் நிலையில், இது மெல்ல பிராந்திய போராகவும் மாறி வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக அங்குள்ள அமைப்புகள் உள்ளே வந்து தாக்குதல் நடத்துவது நிலைமையை மோசமாக்கி வருகிறது.

ஹவுதி தாக்குதல்
இதற்கிடையே சவுதி அரேபியா வாகனங்கள் மீது ஏமனில் உள்ள ஹவுதி படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் நேற்று திங்கள்கிழமை இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-வடியா முகாமில் சவுதி படையினர் மற்றும் ராணுவ முகாம்களை ஹவுதி படைகள் கண்காணித்ததாகவும், அங்கு வெடிகுண்டுகள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களுடன் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டறிந்ததாகவும் ஏமன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்தே அதை தாக்கி அழிக்க ஹவுதி முடிவு செய்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை கொண்டு இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதாக ஹவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚨 #BreakingNews: Footage released by the Yemeni Armed Forces (Houthis) shows ballistic missile strikes hitting incoming military equipment transport trucks from Saudi territory at the Al-Wadiah camp.#Yemen #SaudiArabia #AlWadiah #Military #Geopolitics pic.twitter.com/3kjjGQVgnz
— X-K (@ConflictRadarME) September 7, 2026
பகீர் வீடியோ
தாக்குதல் தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் ராணுவ தளவாடங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை நோக்கி ஏவுகணை பாய்ந்து தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த வாகனங்களில் ராணுவ உபகரணங்களும் ஆயுதங்களும் இருந்த நிலையில், ஏவுகணை தாக்கிய உடனேயே மிக பெரிய வெடிப்புகள் ஏற்படுவதும் அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் உருவாகிறது. இதற்கிடையே பதறிப்போன வீரர்கள் முகாமில் இருந்த தப்பி ஓடும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
சவுதி அரேபியாவுக்கும் ஹவுதி படைகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. நான்கு ஆண்டுகளாக நீடித்திருந்த போர் நிறுத்தம் ஜூலை மாதம் முறிந்ததை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஏமனில் இருந்து ஹவுதி படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்களையும் குறிவைத்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படுகாயம்
இந்த தாக்குதலில் எண்ணெய் நிறுவனங்களின் தளங்களும் தாக்கப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் சவுதி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 73 பேர் காயமடைந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். சவுதி அரேபியாவின் தெற்கு மாகாணத்தில் அமைந்துள்ள பல்வேறு எரிசக்தி நிலையங்கள் ஹவுதி தாக்குதலுக்கு உள்ளானதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சில எண்ணெய் தளங்களில் பணிகள் நிறுத்தப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
சவுதி எச்சரிக்கை
இதற்கிடையே ஹவுதி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்கள் இறையாண்மையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சவுதி அரேபியா மேற்கொள்ளும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹவுதி படைகள் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என்றும் சவுதி வலியுறுத்தியுள்ளது.