லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி நடித்திருக்கும் “டிசி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பலரும் வாமிகா கேபி குறித்தும், அவருடைய உதவும் பண்பு பற்றியும் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை ஜீவா சுப்ரமணியம் அவருடைய சமூக வலைதளப்பக்கத்தில் வாமிகா கேபி குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், “இன்று D.C. திரைப்படத்தில் சந்திராவாக நடித்திருக்கும் வாமிகா கபி அவர்களைப் பார்க்கும்போது, என் மனதில் முதலில் வருவது எங்கள் ஆரம்ப காலப் பயணம்தான். அவருடைய ஆரம்ப காலத்தில், அவருடன் நான் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறேன். அவருடன் நான் பயணித்த அந்த நாட்கள் அனைத்தும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகவும் இனிமையான நினைவுகள்.
அவர் தனக்குப் பிடிக்காத எதையும் செய்ய மாட்டார். தனது உழைப்பிலும், தனது முடிவுகளிலும் மிகவும் உறுதியாக இருப்பவர். அந்தத் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நான் அவரிடமிருந்துதான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் பல நேர்காணல்களிலும் சொல்லியிருக்கிறேன்.
எனக்குள் தைரியத்தை விதைத்தவர் வாமிகா மேடம்தான். நான் எப்போதும் அவரை “மேடம்” என்றுதான் அழைப்பேன். ஆனால் அவர், “மேடம் என்று அழைக்காதே… வாமிகா என்று அழை” என்று சொல்வார். அந்த அளவுக்கு எங்களுடைய உறவு ஒரு முதலாளி–உதவியாளர் உறவாக இல்லாமல், இரண்டு சகோதரிகள் போலவே இருந்தது. அவர் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய பல திரைப்படங்களிலும் அவருடன் நான் உதவியாளராகப் பயணித்திருக்கிறேன்.