சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், “முதல்வர் வாரத்தில் ஒருநாள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருகிறார். அதேபோல் தலைமைச் செயலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரத்தில் ஒருநாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வேட்டி, சட்டை அணிந்து வர நடவடிக்கை வேண்டும் என முதல்வரிடம் கோரினேன். வேட்டி, சட்டை அணிவது தமிழர்களின் மரபைப் போற்றுவதுடன், நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
இதன்படி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இனி வாரத்தில் ஒருநாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘மரபு ஆடை தினம்’ கடைப்பிடிக்கப்பட உள்ளது.” என்றார். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இதுதொடர்பான விவாதம் தொடங்கியது.
இந்த நிலையில், இது குறித்து தவெக அரசுக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் சிபிஎம் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்கள் வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டுமென அரசாணை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.