ஐந்தில் ஒருவருக்கு ‘வீக் எண்ட் மைக்ரேன்’ வார இறுதியில் ஏற்படும் தலைவலி பாதிப்பு இருக்கிறது. இந்த பாதிப்புக்கான சரியான காரணங்கள் யாருக்கும் தெரியாது. பரபரப்பான வேலை, அதிகப்படியான வேலைப்பளு இரண்டும் பிரதான காரணங்களாக இருக்கலாம் என கருதப்படுகின்றன. வார இறுதியில் இந்த இரண்டும் குறைவதால், கார்ட்டிசால் போன்ற ஹார்மோன்கள் தலைவலியைத் தூண்டுகின்றன.
வேலை நாள்களில் அடிக்கடி காபி குடிப்பவர்கள், வார இறுதியில் அதைக் குறைத்துக்கொள்வார்கள். ரத்தத்தில் கஃபைன் அளவு குறைவதாலும் தலைவலி வரலாம். அதே போல வார இறுதியில் அதிக ஆல்கஹால் குடிப்பதாலும் தலைவலி வரலாம்.
வீக் எண்ட் பார்ட்டி என்ற பெயரில் கிளப், பார்ட்டிக்குச் சென்று, மங்கலான ஒளியும் பிரகாசமான ஒளியும் மாறிக் கொண்டிருக்கும் சூழலில் இருப்பது, இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, மறுநாள் அதிக நேரம் தூங்குவது, சர்கேடியன் ரிதம் எனப்படும் நம் உடலின் தூக்க-விழிப்பு சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு தலைவலி வரலாம்.

வார இறுதி நாள்களில் நேரம் கெட்ட நேரத்தில் தாமதமாகச் சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து தலைவலி தூண்டப்படலாம்.
வாரம் முழுவதும் உட்கார்ந்தபடி வேலை பார்த்துவிட்டு, வார இறுதியில் வெளிப்புற வேலை, தோட்ட வேலை, வீட்டு வேலைகள் செய்தாலும் தலைவலி தூண்டப்படலாம்.
இதன் அறிகுறிகள் பலவிதங்களில் வெளிப்படலாம். அவை…
ஒரு பக்கத்தில் தலைவலி, சில சமயங்களில் இரண்டு பக்கங்களிலும் தலைவலி…
குமட்டல் அல்லது வாந்தி…
சத்தம் மற்றும் வெளிச்சத்தைச் சகித்துக்கொள்ள முடியாதது.
பார்வையில் மாற்றங்கள் ஏற்படுவது… சரியாகத் தெரியாதது, வண்ணக்கோடுகள் தெரிவது , ஒளிக்கீற்றுகள், மின்னல் கோடுகள் வந்து போவது, பார்வை மங்குதல்,
கொட்டாவி
உடலின் ஒரு பகுதியில் ஊசி குத்துவது போன்ற அல்லது மரத்துப்போன உணர்வு ஏற்படுதல்
வார்த்தை உபயோகத்தில் தடுமாற்றம் ஏற்படுவது
இவை எல்லாம் பொதுவாக ஏற்படும் மைக்ரேன் (common migraine) அறிகுறிகள்.