வாழ்ந்தா இங்க வாழனுங்க.. நல்ல சம்பளம், ஏகப்பட்ட லீவு வேற.. வெளியானது சிட்டிகளின் தரவரிசை லிஸ்ட் | World’s Most Liveable Cities 2026: Copenhagen Retains No.1 Spot, Here’s How Indian Cities Ranked

Spread the love

Business

oi-Vigneshkumar

லண்டன்: உலகில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலை எகானாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் வழக்கம் போல ஐரோப்பிய நகரங்களே ஆதிக்கம் செலுத்துகிறது. அதேநேரம் இந்திய நகரங்கள் இந்த லிஸ்ட்டில் டாப் 100 இடங்களில் கூட வரவில்லை. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

ஒவ்வொரு ஆண்டும் இஐயு எனப்படும் எகானாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகின் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிடும். அதன்படி 2026ம் ஆண்டுக்கான பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடப்பு ஆண்டுக்கான உலகின் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலில், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் முதலிடத்தை பிடித்துள்ளது.

Most Liveable Cities

டென்மார்க்

கோபன்ஹேகன் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள 173 நகரங்கள் ஆய்வு செய்து, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட 30 வெவ்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்த பட்டியலை ரெடி செய்துள்ளனர். இந்த ஆண்டும் இந்தியாவின் எந்த நகரமும் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.

இந்த லிஸ்ட் ஐந்து முக்கிய பிரிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நிலைத்தன்மைக்கு 25 சதவீதம், சுகாதாரத்திற்கு 20 சதவீதம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு 25 சதவீதம், கல்விக்கு 10 சதவீதம், உள்கட்டமைப்புக்கு 20 சதவீதம் என்ற விகிதத்தில் மார்க் வழங்கப்பட்டுள்ளன.

காரணம் என்ன

கல்வி, உள்கட்டமைப்பு, நிலையான வளர்ச்சி ஆகிய மூன்று பிரிவுகளிலும் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் முழு மார்க் பெற்று மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரத் திட்டமிடல், சைக்கிள் கலாச்சாரம், சிறந்த பொது போக்குவரத்து, குறைந்த அளவே பதிவாகும் குற்றம் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவை இந்த நகரத்தின் முக்கிய பலமாக கருதப்படுகின்றன.

டாப் 10 நகரங்கள்

பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் வியன்னா இந்த முறை 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் பொதுச் சேவைகளில் தொடர்ந்து சிறந்த மார்க் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் 3வது இடத்தையும், சிட்னி 4வது இடத்தையும் பிடித்துள்ளன. மெல்போர்ன் தரமான கல்வி, மருத்துவ வசதிகள் மற்றும் கலை, விளையாட்டு கலாச்சாரத்திற்காக நல்ல இடத்தில் இருக்கிறது. சிட்னி நவீன உள்கட்டமைப்பு, உலகத் தரமான பல்கலைக்கழகங்கள் மற்றும் இயற்கை அழகால் கவனம் ஈர்த்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் 5வது இடத்திலும், ஜெனீவா 6வது இடத்திலும் உள்ளன. பாதுகாப்பு, சுத்தமான சுற்றுச்சூழல், சிறந்த பொது போக்குவரத்து மற்றும் உயர்தர மருத்துவ சேவைகள் இந்நகரங்களின் பலமாகும். ஜப்பானின் ஒசாகா 7வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு 8வது இடத்தையும் பிடித்துள்ளன. கனடாவின் வான்கூவர் 9-வது இடத்திலும், ஜப்பான் தலைநகர் டோக்கியோ 10வது இடத்திலும் இடம் பெற்றுள்ளன.

இந்திய நகரங்கள்

இந்தாண்டும் கூட இந்தியாவின் எந்தவொரு நகரமும் இதில் டாப் 10 இடங்களுக்கு வரவில்லை. வேகமாக வளர்ந்து வரும் பல நகரங்கள் இந்தியாவில் இருந்த போதிலும், போக்குவரத்து நெரிசல், மாசுபாடு, உள்கட்டமைப்பு சவால்கள் மற்றும் வாழ்க்கை தரம் தொடர்பான பிரச்சினைகளால் இந்திய நகரங்களால் டாப் 100 இடங்களுக்குள் கூட வர முடியவில்லை. இந்திய நகரங்களில் அதிகபட்சமாக டெல்லி 120வது இடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து மும்பை 121வது இடத்தையும், சென்னை 123வது இடத்தையும், பெங்களூர் 127வது இடத்தையும் பிடித்தன.

இந்த பட்டியலின் கடைசி இடத்தில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் மீண்டும் இடம்பெற்றுள்ளது. போர், அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் பாதுகாப்பு சவால்கள் காரணமாக டமாஸ்கஸ் உலகின் வாழ மிகவும் மோசமான நகரமாக இருக்கிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரானும் மோசமான நகரங்களில் ஒன்றாகவே இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *