விகடன் செய்தி எதிரொலி: சிவகங்கை மருத்துவமனை குப்பைகள் அகற்றம்விகடன் செய்தி எதிரொலி; சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே அகற்றப்பட்ட குப்பைகள்.. அதிகாரிகள் நடவடிக்கை!

Spread the love

சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அருகே கொட்டப்பட்டு வந்த குப்பைகளால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மட்டுமன்றி, சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். குறிப்பாக, குப்பைகள் குவிந்து கிடந்ததுடன், அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து, சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உருவாகியிருந்தது.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் எனப் பலரும் இந்தப் புகையால் பாதிக்கப்படும் சூழல் இருந்தது. மருத்துவமனைக்கு அருகிலேயே குப்பைகள் கொட்டப்படுவது குறித்து பொதுமக்களிடையேயும் அதிருப்தி நிலவி வந்தது.

இது தொடர்பாக, விகடன்.காம்-ல் பிரச்னையின் தீவிரத்தைச் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டோம்.

அதில், சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டோம்.

மேலும், இந்தப் பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடமும், நகராட்சி அலுவலகத்திடமும் புகார் தெரிவிக்கப்பட்டு, மருத்துவமனை அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தோம்.

அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அகற்றப்பட்ட குப்பைகள்:

அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் நீண்ட நாள்களாக தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றும் பணிகள் தொடங்கியது எப்படி, யாரின் அறிவுறுத்தலின் படி இந்த பணி தொடங்கியது என்று நாங்கள் எழுப்பிய கேள்விக்கு சிவகங்கை நகராட்சி உதவிப் பொறியாளர் கூறிய பதில்…

“தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி, ஐ.ஏ.எஸ்., மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படியும், இது தொடர்பாக வெளியான விகடன் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்னையின் அடிப்படையிலும், சிவகங்கை மாவட்ட நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை தற்போது அகற்றியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

அதன்படி, சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் இனிமேல் குப்பைகள் கொட்டக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், நீண்ட நாள்களாக மருத்துவமனை அருகே குவிந்து கிடந்த குப்பைகளால் ஏற்பட்ட சுகாதாரப் பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. குப்பைகள் அகற்றப்பட்டதுடன், மீண்டும் அதே இடத்தில் குப்பைகள் கொட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் நகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது.

மருத்துவமனை என்பது நோயாளிகள் நலம் பெற வரும் இடம். அத்தகைய இடத்தைச் சுற்றி குப்பைகள் குவிந்து, அதிலிருந்து புகை வெளியேறுவது நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாகவே இருந்து வந்தது.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் மருத்துவமனைக்கு வருபவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *