விசிக: "எமது கோரிக்கைகளை அரசாணைகளாக மாற்றிய அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றி" – சிந்தனை செல்வன்

Spread the love

த.வெ.க அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என இரு கட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இன்று ஆளுநர் மாளிகையில் விசிக-வின் திண்டிவனம் எம்.எல்.ஏ வன்னி அரசு ஆதி திராவிடர் நலன் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் எம்.எல்.ஏ ஷாஜகான் சிறுபான்மைத்துறை அமைச்சராகவும் ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சிந்தனைச் செல்வன் - திருமாவளவன்
சிந்தனைச் செல்வன் – திருமாவளவன்

இந்த நிலையில், விசிக முன்னால் எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் தன் எக்ஸ் பக்கத்தில், “விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப் பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள்.

அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியைப் பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி.

இந்தத் தருணத்தில் இந்தத் துறை சார்ந்தும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்தத் தருணத்திலும் மனப்பூர்வமாகப் பதிவிடுகிறேன்.

சிந்தனைச் செல்வன் - திருமாவளவன்
சிந்தனைச் செல்வன் – திருமாவளவன்

தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியைப் பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்தபட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன்.

இந்தச் சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன். யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும், பாராட்ட மனமின்றி கடந்து போனாலும், மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச் சாதனைகளைக் கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்குச் சமர்ப்பிக்கிறேன்.

இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் எனத் தலைவர் திருமாவளவன் விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம். இந்தச் சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன். தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன். மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கடந்த 2021 – 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும், சாதனைகளும். ….

எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதைப் போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.

அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில் SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதைச் சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) ‍ SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதைப் போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SC/ST பிரிவைச் சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy) பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி ) ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.

சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் வன்னி அரசு பதவிபிரமானம்
அமைச்சர் வன்னி அரசு பதவிபிரமானம்

பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.

மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு எனக் குறைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *