விஜய்யின் ‘சனிக்கிழமை’ சுற்றுப் பயண ரகசியம்: தவெக தொண்டர்கள் மனநிலை என்ன? | Vijay Saturday tour secret What is the mood of the TVK volunteers explained

1376045
Spread the love

ஒருவழியாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை அறிவித்திருக்கிறார் விஜய். ஆனால் ‘சனிக்கிழமை’ மட்டும்தான் வண்டி ஓடும் எனும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள அவரின் பயணத் திட்டம், தவெக-வில் சலசலப்பை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே, ‘பனையூர் பார்ட்டி’, ‘ஒர்க் ஃப்ரம் ஹோம் பார்ட்டி’ எனும் விமர்சனங்களை தாங்கும் தவெக தொண்டர்கள், இப்போது ‘வீக் எண்ட் பார்ட்டி’ எனும் வார்த்தைகளையும் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

‘ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்பது விஜய்யின் பிரபலமான பஞ்ச். அதேபோல, நேரடியா 2026-ல் முதல்வர்தான் என்ற ஒரே முடிவோடு அரசியலில் குதித்தார் விஜய். கட்சியின் முதல் மாநில மாநாடு, பரந்தூர் விசிட், 2-ஆம் மாநில மாநாடு என கடந்த இரண்டரை ஆண்டுகளில் பனையூரை விட்டு விஜய் வெளியே வந்த நிகழ்வுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்த நிலையில்தான், தமிழகம் தழுவிய சுற்றுப் பயணத்தை அறிவித்துள்ளார் விஜய். அவரின் சுற்றுப் பயணத்தை ஆவலோடு எதிர்பார்த்த தவெக தொண்டர்கள், பயணத் திட்டத்தை பார்த்து வாயடைத்து போயிருக்கிறார்கள். ஏனென்றால், தமிழகத்தில் இதுவரை அரசியல் தலைவர்கள் திட்டமிட்ட சுற்றுப் பயணங்கள் என்பது, தொடர்ச்சியானதாக இருக்கும். அல்லது சில கட்டங்களாக பிரிக்கப்பட்டு திட்டமிடப்படும்.

ஆனால், விஜய்யின் சுற்றுப் பயணம் செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி முடிவடைகிறது. கிட்டத்திட்ட மூன்றரை மாதங்கள் உள்ள இந்த காலகட்டத்தில், விஜய்யின் பயணம் வெறும் 16 நாட்கள்தான். அதிலும், ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை மட்டும்தான் பயணத்தை திட்டமிட்டுள்ளார் விஜய். ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் தொகுதி வாரியாக வருவார், வீதி வீதியாக வருவார் என்றெல்லாம் முதலில் தகவல்கள் கசிந்தன. ‘டிரஸ் கோடு’ உட்பட விஜய் கிட்டத்திட்ட ஜெகன் மோகன் ரெட்டியை பின்பற்றுவதால், அவரைப் போல மாநிலம் தழுவிய நடைபயணம் மேற்கொள்வார் என்றெல்லாம் தொண்டர்கள் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்புகளுக்கு ‘சாட்டர்டே விசிட்’களை பரிசாக சந்திருக்கிறார் தளபதி.

சனிக்கிழமைக்கான திட்டம் என்ன? – விஜய்யின் சனிக்கிழமை சுற்றுப் பயணத்துக்கான காரணம் குறித்து பல்வேறு யூகங்கள் உள்ளன. சனிக்கிழமை என்பது வார இறுதி நாள் என்பதால் தொண்டர்கள் திரள வசதியாக இருக்கும். அதேபோல சனிக்கிழமை சுற்றுப் பயணத்தில் பேசப்படும் விஷயங்கள், ஞாயிறு முழுவதும் வைரலாக இருக்கும். இப்படியே ஒரு வாரம் போனால், அடுத்த சனி வந்துவிடும். அந்த சனிக்கிழமையன்று விஜய் பேசுவது, அடுத்த வாரம் வரை ட்ரெண்டில் இருக்கும். இப்படிப்பட்ட மெகா பிளான்களோடுதான் தவெக பயணத்தை திட்டமிட்டிருக்கும் என்று சர்க்காசத்துடன் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஆனால், இப்போதே பல அரசியல் கட்சியினர் விஜய்யின் சனிக்கிழமை பயணத்தை கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர். ‘முழு நேர அரசியல்வாதி தினம்தோறும் மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும்; சனிக்கிழமைதான் வெளியே வருவேன் என்பது ஏற்புடையது அல்ல. இது தவெக சீரியசான கட்சி இல்லை என்ற தோற்றத்தையே உருவாக்கும்’ என்றெல்லாம் விமர்சிக்கின்றனர். குறிப்பாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இத்தகைய உடனடி ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரலில் அறிவிக்கப்படலாம். எனவே, இப்போதே அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழல ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார். அவர் கேரவன் சந்திப்பு மட்டுமின்றி, ரோடு ஷோக்களும் நடத்துகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தொகுதி வாரியாக மக்களை சந்திக்கிறார். இதுவரை சுமார் 150 தொகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் அவர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இப்படி இருக்கையில், ஒரே நாளில் 2 அல்லது 3 மாவட்டங்கள் செல்வதாக அறிவித்துள்ளார் விஜய். அப்படிச் சென்றால் ஒரு மாவட்டத்தில் அதிகபட்சம் ஒரு மணி நேரம் மக்களை சந்திப்பதே பெரிதாக இருக்கும். இது போதுமானதாக இருக்குமா என்ற கேள்வியும் தவெகவினரிடம் உள்ளது.

வரப்போவது மக்களவைத் தேர்தல் அல்ல, சட்டப்பேரவை தேர்தல். எனவே மாவட்டம் வாரியாக செல்லாமல், 234 தொகுதிக்கும் சென்றால்தான், அங்குள்ள கட்சியின் முகங்கள் அடையாளமாக மாறும். அவர்களை தேர்தலில் நிறுத்தினால் மக்களிடம் செல்வதும் எளிது. இதைப் பற்றியெல்லாம் இந்தப் பயணத்தில் திட்டமிட்டுள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் டிசம்பர் மாதத்தில் இந்த சுற்றுப் பயணத்தை முடித்தால், அடுத்தது தேர்தல் நெருங்விடும். அப்போது நேராக தேர்தல் பிரச்சாரம்தான் செல்ல முடியும். கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் ஆகியும், ஒருமுறை கூட மாநிலத்தின் வேர்ப் பகுதி வரை செல்லாமல், நேரடியாக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றால் மக்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறிதான்.

விஜய் சென்றாலே கூட்டம் கூடுகிறது, அதனால்தான் அவர் வெளியில் வருவதில்லை என்ற பதிலை எவ்வளவு காலம்தான் சொல்ல முடியும். அந்த இமேஜை உடைத்து, மக்களோடு மக்களாக சென்றால்தானே அவர்களின் குரலை கேட்க முடியும். அதை விடுத்து சனிக்கிழமைகளில்தான் பிரச்சாரத்துக்கே வருவேன் என்றால், இதனை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது தேர்தலின்போதுதான் தெரியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *