நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.
அதில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ இ.கருணாநிதியின் மகன் வீட்டில் நடந்த குற்றத்தைச் சுட்டிக்காட்டியும் பேசியிருந்தார்.
விஜய்யின் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் இ.கருணாநிதி, “நான் கடந்த 2016 முதல் 2026-ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகள் பல்லாவரம் சட்டமன்றத் திமுக உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன். கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாகத் தி.மு.க.-வில் கழகப் பணியாற்றி வருகிறேன்.

திருமணத்திற்குப் பிறகு இரு முறை மட்டுமே!
எனது மூத்த மகன் ஆண்டோ மதிவாணன் எனது விருப்பத்திற்கு மாறாகப் பெசன்ட் நகரைச் சேர்ந்த திரு.அந்தோணி அவர்களின் இரண்டாவது மகள் மெர்லினா அன் அவர்களைக் காதலித்து வந்தார். அதன்பிறகு 20.01.2017 அன்று திருமணம் செய்து வைத்தேன்.
திருமணத்திற்குப் பிறகு என் மகனும் மருமகளும் திருவான்மியூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்கள். அந்த வீட்டிற்கு நான் நிகழ்ச்சிக்காக இரண்டு முறை மட்டுமே சென்று வந்தேன்.
மற்றபடி அவர்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.