Tamilnadu
oi-Pavithra Mani
தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக வேட்பாளர்களுக்கு செல்லுமிடமெல்லாம் பிரச்சனை எதிர்ப்புகள் கிளம்புகிறது. விஜய் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கினால் 14,000 கோடி சம்பாதித்திருக்க வேண்டும். ஆனால் 600 கோடி தான் கணக்கு காட்டியுள்ளார். மீதிப்பணம் எங்கே போனது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தாராபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “தவெகவினர் எங்கள் தலைவர் ஒவ்வொரு படத்திற்கும் ரூ.200 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றனர். ரைட்டு அது உண்மை தானே. அவர்கள் சொல்வது நியாயம் தானே. அப்படியென்றால் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வாங்கியிருந்தால், 70 படத்திற்கு 14,000 கோடி இருக்க வேண்டுமல்ல. எனக்கு தெரிந்து தேர்தல் வேட்பு மனுவில் ரூ.650 கோடி தான் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மற்ற பணமெல்லாம் என்ன பணம்.

கருப்பு பணத்தை வெள்ளையாக்க
அது எல்லாம் கருப்பு பணம். கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளை பணமாக மாற்றுவதற்காக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் என மக்கள் பேசுகிறார்கள். இது உண்மை தானே. ஏங்க அவர்கள் தான் சொல்கிறார்கள். நம் கட்சியினர் சொல்லவில்லை. மக்கள் கூட சொல்லவில்லை. அவர்கள் கட்சியினர் தான் சொல்கிறார்கள். வருவாய்த்துறை அமைச்சரே பலமுறை சொல்லியுள்ளார். எங்கள் தலைவர் யார் தெரியுமா. ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வாங்கிய தலைவர். அதை விட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என கூறினார்.
ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கினால், 70 படத்திற்கு எவ்வளவு சம்பளம் வந்திருக்க வேண்டும். எத்தனாயிரம் கோடி வந்திருக்க வேண்டும். அதை கணக்கில் காட்டவில்லையே. ஆக இவர் அரசியலுக்கு வந்ததின் நோக்கம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. ஆமா தானே. நான் பேசுவது சரி தானே. கேள்வி கேட்கிறார்கள் தானே மக்கள். அந்த பணம் எல்லாம் எங்கே போனது. வெளிநாட்டில்இருந்து விஜய் ஒரு கார் வாங்கினார்.
கட்டிய மனைவியோடு வாழ வேண்டும்
அந்த காருக்கு ஒழுங்காக வரி கூட செலுத்தாதவர் இன்றைய முதலமைச்சராக உள்ளார். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாவிடின் அது ஊழல் தானே. இது தூய ஆட்சி. தூய்மையான ஆட்சி. வெளிப்படையான ஆட்சி என்று கூறுகிறார். தூய ஆட்சியா நடக்கிறது. அதிமுக எம்எல்ஏக்களை எப்போது விலைக்கு வாங்கினார்களோ அப்போதே, தூய ஆட்சி தீய ஆட்சியாக மாறிவிட்டது.
பாசமென்றால் தாய் தந்தையோடு, கட்டிய மனைவியோடு வாழ வேண்டும். பெற்ற பிள்ளைகளோடு வாழ வேண்டும். உங்கள் வீட்டில் அண்ணனாக இருப்பேன், தம்பியாக இருப்பேன், மாமனாக இருப்பேன் என்கிறார். இது எவ்வளவு பெரிய பொய். அது உங்களிடத்தில் இருக்கிறதா. படத்தில் தான் நடிக்கிறார் என்றால் நிஜத்திலும் நடிக்கிறார். பொது வெளியில் வீர வசனம் தான் பேசு. நிஜத்திலும் வாழ்ந்து காட்ட வேண்டும். இப்படி மக்களை குழப்பி வாக்கு பெறுகிறார்” என்றார்.