இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குறித்துப் பேசிய ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே.விஜய், “ஆயுத பூஜையின் போது ஆயுதங்களை வைத்து வழிபாடு செய்வதுதான் மரபே தவிர, அவற்றைப் பயன்படுத்திச் சுட வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற செயல்கள் தேவையற்ற விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதேபோல், இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி கே.ஜே.எஸ். தில்லான் வெளியிட்ட பதிவில், “ தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியைப் பல்வேறு திசைகளில் திருப்புவது, பின்புறம் ஆள்கள் நிற்பது மற்றும் அரசு ஆயுதத்தை அனுமதியின்றி சுடுவது ஆகியவை கடுமையான பாதுகாப்பு விதிமீறல். இது உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.” என்றும் எச்சரித்துள்ளார்.

அதேவேளையில், பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு ஐ.பி.எஸ். அதிகாரி கூறுகையில், “சத்தீஸ்கரில் சாஸ்திர பூஜையின் போது ஆபத்தில்லாத ‘வெற்று ரவைகளை’ மட்டுமே பயன்படுத்திச் சுடுவது வழக்கமான ஒன்றுதான்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
இன்னும் சிலர், “அங்கிதா சர்மா ஒரு பயிற்சி பெற்ற அதிகாரி. அவர் சேலை அணிந்து கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாலேயே பலர் இதை விமர்சிக்கின்றனர். துப்பாக்கியைக் கையாண்டதில் சிறு குறைகள் இருந்தாலும் அவரின் சிறப்பான பணிப் பதிவைச் சிறுமைப்படுத்தக் கூடாது.” என என்றும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனர்.