விமானத்தில் ‘BOMB’? நடுவானில் சிக்கிய மேட்டர்.. அலர்ட்டான அதிகாரிகள்.. அவசரமாக தரையிறங்கிய விமானம் | Indigo Flight Makes Emergency Landing in Ahmedabad After BOMB Written on Tissue Paper Found Onboard

Spread the love

India

oi-Vigneshkumar

அகமதாபாத்: லக்னோவில் இருந்து சவுதி அரேபியாவின் தம்மாம் நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் ‘BOMB’ என எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் கண்டெடுக்கப்பட்டதால், விமானம் அவசரமாக அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் மொத்தம் 133 பேர் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

எப்போதுமே விமானத்தில் உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பார்கள். இருப்பினும், அதையும் தாண்டி சில நேரங்களில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்துவிடும். மேலும், விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு கடுமையான விதிமுறைகளும் நடைமுறையில் உள்ளன. அது சற்று மீறப்பட்டாலும் கூட எந்தவொரு சமரசமும் இல்லாமல் விமானம் தரையிறக்கப்படும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Indigo flight india

BOMB வாசகம்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சவுதியின் தம்மாம் நோக்கி இண்டிகோ விமானம் வியாழக்கிழமை மாலை புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் ‘BOMB’ என்ற வார்த்தை எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து விமானத்தில் பாதுகாப்பு தொடர்பான அச்சம் ஏற்பட்டதை தொடர்ந்து, விமானத்தை அகமதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி விமானம் வியாழக்கிழமை மாலை சுமார் 5.55 மணியளவில் அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் பயணிகள் மற்றும் விமான குழுவினர் என மொத்தம் 133 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியதும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

என்ன நடந்தது!

இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விசாரணை நடத்தினர். மேலும், விமானத்தில் கண்டெடுக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் ‘BOMB’ என்று எழுதப்பட்டிருந்த நிலையில், உண்மையில் விமானத்துக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எனினும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

மேலும், விமானம் முழுக்க சோதனை நடத்தப்பட்டதிலும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எதுவும் தெரியவில்லை. இதற்கிடையே டிஷ்யூ பேப்பரில் எழுதப்பட்டிருந்த வாசகத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் கையெழுத்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

டிஷ்யூ பேப்பர்

பயணிகளிடம் டிஷ்யூ பேப்பரை கொடுத்து சில வார்த்தைகளை எழுதுமாறு கேட்டு வாங்கியுள்ளனர். அவற்றை விமானத்தில் கண்டெடுக்கப்பட்ட ‘BOMB’ வாசகம் எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பருடன் ஒப்பிட்டு பார்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அந்த வாசகத்தை யார் எழுதியது என்பதை கண்டறிய விசாரணை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

2வது முறை

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் கடந்த 10 நாட்களில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்றும் அகமதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த சம்பவம் தொடர்பான விசாரணையின்போது விமான ஊழியர் ஒருவரின் பெயரும் அடிபட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதில் கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

தற்போது இண்டிகோ விமானத்தில் ‘BOMB’ என எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *